உலகமே எதிர்பார்த்த சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் இன்று (ஆகஸ்ட் 23) தரையிறங்கியது. இதன்மூலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெருமையை சந்திரயான் 3 பெற்றுள்ளது. அதனை சாதித்துக் காட்டிய முதல் நாடு (தென் துருவத்தில்) என்ற பெருமையும் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. மேலும், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்த சாதனையை எட்டிய நான்காவது நாடாக இந்தியா உள்ளது.
இதன்காரணமாக, உலக வரலாற்றில் இந்திய விண்வெளி ஆய்வுத் துறை பெரிய அளவிலும் பெருமையாகவும் பேசப்பட்டு வருகிறது. அதிலும் இத்துறையின் மைல்கற்களாக சந்திரயான் விண்கலங்கள் பார்க்கப்படுகின்றன.
தற்போது நிலவில் வெற்றிகரமாய் கால் பதித்திருக்கும் சந்திரயான் 3 விண்கலத்தின் தகவல் தொடர்பில் சந்திரயானின் 2 ஆர்பிட்டரின் தொழில்நுட்பமும் அடங்கியுள்ளது. இவையிரண்டும், தங்களுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, இந்த வெற்றிக்கு முன்பாக சந்திரயான் 2 ஆர்பிட்டரின் தொழில் நுட்பம் பெரும் பங்காற்றியுள்ளது. இந்தச் சரித்திர சாதனைக்குப் பின் தமிழர்கள் சிலரும் தங்களது பிரதான பங்களிப்பைச் செய்துள்ளனர். அதில், இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய ஆளில்லாத விண்கலம் சந்திராயன் 2ஐச் செலுத்தியதில் தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி வனிதா முத்தையாவும் ஒருவர்.
சென்னையைச் சேர்ந்த இவர் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வழிகாட்டுதலைப் பெற்ற இவர் சந்திரயான்2 திட்டப் பணிக்கு இயக்குநராகப் பணியாற்றியவர். திட்ட இயக்குநர் என்பது மொத்த விண்கலம் மற்றும் அதன் உறுப்புகளைத் தயாரித்தல் உள்ளிட்டவற்றை சரிபார்ப்பது, விண்கலத்தை இறுதி வடிவத்துக்கு கொண்டுவந்து விண்கலத்தை அனுப்பும் வரை பொறுப்பு ஏற்று செயல்படுத்துவதாகும்.
இந்த முக்கியப் பொறுப்பை வகித்த வனிதா முத்தையா, இஸ்ரோவின் பல முக்கிய விண்கலங்களில் செயல்பட்டுள்ளார். விஞ்ஞானி வனிதா முத்தையா இதற்குமுன்பு கார்டோசாட் -1, ஓசன்சாட் – 2 உள்ளிட்ட விண்கலங்களில் பணியாற்றியுள்ளார். 2013ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் செயற்கைக்கோள் வடிவமைப்பில் முத்தையா வனிதாவின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகும்.
மேலும் இவர், இஸ்ரோவில் 32 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவருக்கு அஸ்ட்ரானாட்டிகள் சொசைட்டி ஆஃப் இந்தியா 2006ஆம் ஆண்டு சிறந்த பெண் விஞ்ஞானி என்ற விருதை வழங்கியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நேச்சர் என்ற சர்வதேச ஆய்விதழ், இவரை கவனிக்கப்பட வேண்டிய விஞ்ஞானிகள் பட்டியலில் குறிப்பிட்டிருந்தது. இவரை ஊடகங்கள் ’ராக்கெட் பெண்மணி’ என்று புகழ்ந்துள்ளன.
சந்திரயான் 3 வெற்றியில் சந்திராயான் - 2 விண்கலத்திற்கும் முக்கிய பங்களிப்பு உள்ளது. இதில் இரண்டு வகையாக பிரிக்கலாம். ஒன்று சந்திரயான் 2 லேண்டர் வெடித்துச் சிதறுவதற்கு முன்பு வெளியிட்ட புகைப்படங்கள். அந்த புகைப்படங்கள் அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு உதவின. அதேபோல், சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டர் ரோவர் மட்டுமே வெடித்துச் சிதறியுள்ளது. சந்திரயான் 2-ன் விண்கலம் இன்னும் விண்ணில்தான் உள்ளது. தற்போது சந்திரயான் 3, சந்திரயான் 2 உடன் தொடர்பில்தான் இருக்கிறது. அதனால் அதன் பயன் தற்போதும் தொடர்கிறது.