நீலகிரி | க்ரைம் பார்ட்னர்களாக இருந்த காட்டுயானைகள்... இப்போது க்யூட்டான கும்கி பார்ட்னர்கள்!

நீலகிரி மாவட்டத்தில் அடர் வனத்திலிருந்து வெளியேறிய யானைகளை, காட்டுக்கே திருப்பி அனுப்பும் பணிகளில் ஸ்ரீனிவாசனும், சங்கரும் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்... உயிர் நண்பர்களான ஸ்ரீனிவாசன் - சங்கர் இணையின், சுவாரஸ்யமான பின்னணியைப் பார்க்கலாம்...
கும்கி யானைகள்
கும்கி யானைகள்புதிய தலைமுறை

செய்தியாளர் - மகேஷ்வரன்

தமிழகத்திலேயே மலை மாவட்டமாக அமைந்திருப்பது நீலகிரி மட்டும்தான். முழுக்க முழுக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் மீதே அமைந்துள்ளது. நீலகிரி மாவட்ட மக்களுக்கு, வனவிலங்குகளால் ஏற்படும் தொல்லைகள் புதிதல்ல. இந்த முறை, கூடலூர் அருகே தொரப்பள்ளி, புத்தூர்வயல், குனில்வயல், ஏச்சம்வயல் உள்ளிட்ட கிராமத்தினரை அச்சுறுத்துவது, காட்டு யானைகள்.

மொத்தம் 7 யானைகள்... கூட்டணி போட்டும் தனித்தனியாகவும் குடியிருப்புகளில் சுற்றித் திரிகின்றன. விளைநிலங்களில் பயிர்களை சேதப்படுத்துகின்றன. தற்போது பலாப்பழ சீசன் என்பதால், அதன் வாசம் யானைகளை காந்தமாக ஈர்க்கிறது. இதனால் தூக்கமிழந்துள்ளனர் கிராம மக்கள்.

காட்டு யானைகளை வனத்திற்குள்ளே திருப்பி அனுப்புவதற்காக வந்து சேர்ந்திருப்பவர்கள்தான் ஸ்ரீனிவாசன் - சங்கர். இவ்விருவரும் கும்கி யானைகள். இவர்களின் ஃப்ளாஷ்பேக் அலாதியானது.

 ஸ்ரீனிவாசன் - சங்கர்
ஸ்ரீனிவாசன் - சங்கர்

ஒருகாலத்தில் ஸ்ரீனிவாசனும் சங்கரும், க்ரைம் பார்ட்னர்களாகத் திரிந்த காட்டு யானைகள். நெருங்கிய நண்பர்களான இவ்விரு யானைகளாலும் 2016 ல் தாக்கப்பட்டு, சேரம்பாடி பகுதியில் மக்கள் உயிரிழப்பது தொடர்கதையாக நீண்டது. இந்த முரட்டு நண்பர்களைப் பிடிக்க முயற்சி எடுத்தது வனத்துறை. ஸ்ரீனிவாசன் - சங்கர் இணையில், பிடிபட்ட ஸ்ரீனிவாசனை தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு சென்று, திறம்வாய்ந்த கும்கியாக மாற்றியது வனத்துறை.

வனத்துறையினரிடம் சிக்காத சங்கர், தன்னந்தனியானது. அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தியது. 2021 ல், யானை 'சங்கர்' தாக்கியதில், கொளப்பள்ளியில் ஒரே வாரத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

வனத்துறை ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். கூடலூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினரையும் அவரது மகனையும் ஒரே நாளில் தாக்கிக் கொன்றது. இதனால், வனத்துறையினரின் மயக்க ஊசி பொருத்திய துப்பாக்கி, சங்கரை குறி வைத்தது. தமிழ்நாடு - கேரளா காடுகளுக்கு இடையே, இடம்பெயர்ந்து கொண்டே இருந்த சங்கர், 2 மாத முயற்சிகளுக்குப் பிறகு, கொளப்பள்ளியில் பிடிபட்டது.

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, 5 ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையால் பிடித்துச் செல்லப்பட்ட, தனது நெருங்கிய நண்பன் ஸ்ரீனிவாசனை சந்தித்தது. அதுவரை ஆக்ரோஷமாக இருந்த சங்கர், அதன் பிறகு சமத்துப் பிள்ளையானது.

ஊருக்குள்ளே நுழையும் யானைகளை காட்டுக்கே திருப்பி அனுப்பும் பணிகளுக்காக, நண்பன் ஸ்ரீனிவாசனைப் போலவே, சங்கரும் கும்கியாக மடைமாற்றப்பட்டது.

ஸ்ரீனிவாசனுடன் சேர்ந்தே பராமரிக்கப் படுகிறது. 5 ஆண்டுளாக ஒரு முறை கூட சந்திக்காத போதும், இவ்விருவரின் நட்பில், ஒரு துளிகூட குறையவில்லை. முன்பை விட அதிகமாக நட்பு பாராட்டி வருகின்றன.

கும்கியாக இருந்து, காட்டு யானைகளை விரட்டும் பணியிலும், ஒன்றாகவே ஈடுபடுகிறது ஸ்ரீனிவாசன் - சங்கர் கூட்டணி.

மேய்ச்சலின்போதும் நெருக்கமாகவே இருந்து, அன்பையும் பாசத்தையும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்கின்றன.

ஒரு காலத்தில், காட்டு யானைகளாக, தும்பிக்கை கோர்த்துக் கொண்டு சேரம்பாடியில் சுற்றித் திரிந்து, மக்களை அச்சுறுத்திய ஸ்ரீனிவாசன் - சங்கர் கூட்டணி, இப்போது தொரப்பள்ளியில் மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. பொதுவாக கும்கி யானைகள், பிற கும்கிகளுடன் இணைந்து பணியாற்றும். ஆனால், அருகருகே நின்று பணி செய்வதை விரும்புவதில்லை.

ஆனால், ஸ்ரீனிவாசன் - சங்கர் நண்பர்களின் அன்யோன்யம், அவற்றின் பாகன்களை மட்டுமல்ல, எல்லோரையுமே வியக்க வைக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com