
குருகிராம் பகுதியில் நுழைய அனுமதிக்க மறுத்த போலீஸார் மீது மக்கள் கல்வீசித் தாக்கினர்.
டெல்லியில் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நூற்றுக்கணக்கானோர் குருகிராம் நகரத்தில் பணிபுரிந்து வந்தனர். கொரோனா பொது முடக்கத்தால் தொழிற்சாலை மூடப்பட்டதால், இவர்கள் அனைவரும் தங்கள் சொந்த கிராமத்திற்குத் திரும்பினர். இதனால் வேலையின்றி அவர்கள் இருந்தனர். இந்நிலையில் பொது முடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின்படி, இன்று முதல் குருகிராமில் தொழிற்சாலை இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் டெல்லி எல்லையைச் சேர்ந்த மக்கள் நடைப்பயணமாக மீண்டும் குருகிராமில் உள்ள தொழிற்சாலைக்குச் சென்றனர். ஆனால் எல்லையிலிருந்த போலீஸார், அவர்களை குருகிராமிற்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீஸார் மீது கல்வீசித் தாக்கினர். இதையடுத்து போலீஸார் தரப்பிலிருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது. இதில் சிலர் காயமடைந்தனர். இதற்கிடையே டெல்லி மற்றும் ஹரியானா இடையேயான எல்லைப்பகுதிகள் மூடப்பட்டன.