இந்தியாவிலிருந்து காணாமல் போன ராமர், சீதை சிலைகள் - 42 வருடங்களுக்கு பின் மீட்பு

இந்தியாவிலிருந்து காணாமல் போன ராமர், சீதை சிலைகள் - 42 வருடங்களுக்கு பின் மீட்பு
இந்தியாவிலிருந்து காணாமல் போன ராமர், சீதை சிலைகள் - 42 வருடங்களுக்கு பின் மீட்பு

42 வருடங்களுக்கு முன்பு திருடுபோன தமிழகத்தைச்சேர்ந்த மூன்று சுவாமி சிலைகள் இந்தியா கொண்டு வரப்பட்டது; இந்தச்சிலைகளை மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர், தமிழ்நாடு ஏ.டி.ஜி.பி.யிடம் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அனந்தமங்களம் கோவிலில் கடந்த 1978ஆம் ஆண்டு ராமர், சீதை லட்சுமணன் ஆகிய 3 சிலைகள் திருடப்பட்டு அதற்கு பதிலாக 3 போலி சிலைகள் கோவிலில் வைக்கப்பட்டு சிலைகள் அனைத்தும் கடத்தி செல்லப்பட்டன. இந்த மூன்று சிலைகளும் பல கோடி ரூபாய் மதிப்புடையது என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே நான்கு பேரை தமிழக போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் சிலைகள் அனைத்தும் வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், தமிழக சிலை மீட்பு குழுவினர் தொடர்ச்சியாக எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, இங்கிலாந்தில் இருந்த இந்த சிலைகள் கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சமீபத்தில் இந்திய தூதரக உதவியுடன், இங்கிலாந்தில் இருந்து மூன்று சிலைகளும் பூஜை செய்யப்பட்டு பாதுகாப்பாக டெல்லி கொண்டு வரப்பட்டன. டெல்லி வந்தடைந்த சிலைகள் அங்கிருந்து சென்னை அனுப்பப்படுகிறது. ஏறத்தாழ 42 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் இருந்து திருடு போன மூன்று சிலைகள் இங்கிலாந்தில் மீட்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங்கிடம் 3 சுவாமி சிலைகளை ஒப்படைத்தார். இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல், ''இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014க்கு பின்னர் 40 சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 1978இல் கடத்தப்பட்ட இந்த சிலைகள் பல்வேறு நடவடிக்கைகளுக்கு பின்னர் மீட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.

முதலில் இந்த சிலைகளை மீட்டு கொண்டுவர சில சிரமங்களை சந்திக்க வேண்டிஇருந்தது; அதையும் தாண்டி சிலைகள் மீட்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் காலங்களில் இதுபோன்று சிலை திருட்டுக்கள் நடக்காமல் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்யவேண்டும். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் திருடப்பட்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது வருகிறது. திருடப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்பட்ட சிலைகள் வருங்காலங்களில் மீட்கப்பட்டு சம்மந்தப்பட்ட மாநிலத்திடம் ஒப்படைக்கப்படும்'' என்றார்.

 தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி அபய்குமார் சிங் பேசுகையில், ''மொத்தம் 4 சிலை 1978இல் கடத்தப்பட்டது. அதில் 3 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. அனுமன் சிலை சிங்கப்பூரில் உள்ளது. தமிழகத்தில் 300க்கும் மேற்பட்ட சிலை கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளது. இதுவரை 10 சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிதாக சிலை கடத்தல் வழக்குகள் தமிழகத்தில் இல்லை. இன்னும் நமது மாநில சிலைகள் நியூயார்க் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ளது தெரியவந்துள்ளது. அதை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் இருந்து கடத்தப்பட்ட "துவரபாலகா" கற்சிலை தற்போது மீட்கப்பட்டுள்ளது. அது விரைவில் தமிழகத்துக்கு கொண்டுவரப்படும். மேலும் பல வழக்குகள் துப்பு இல்லாமல் மூடப்பட்டன. அவை தொடர்பாக தகவல் கிடைக்கும் சமயங்களில் மீண்டும் வழக்குகளை ரீ-ஓப்பன் செய்து விசாரித்து வருகிறோம். தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அனைத்து வசதிகளும் அரசு செய்து கொடுத்துள்ளது. வரும் காலங்களில் இதுபோன்று சிலை திருட்டுக்கள் நடக்காமல் இருப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்'' என்று பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com