இரவெல்லாம் நட்சத்திரங்களை எண்ணுவேன்: 40 நாட்கள் லாரியிலேயே தங்கியிருந்த ஓட்டுநரின் அனுபவம்
ஊரடங்கு அறிவிப்பால் வெளிமாநிலங்களுக்குச் சென்ற பலரும் ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர். பலர் நடந்தே சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இந்நிலையில் லாரி ஓட்டுநர் ஒருவர் கிட்டத்தட்ட 40 நாட்களை தன்னுடைய லாரியிலேயே கழித்துள்ளார். தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். தன்னுடைய 40 நாட்கள் அனுபவம் குறித்து லாரி ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்டைச் சேர்ந்த சுனில்குமார் என்ற லாரி ஓட்டுநர் டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனத்தில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் நிறுவன பணிக்காக மார்ச்22ம் தேதி டெல்லியில் இருந்து ஹைதராபாத் கிளம்பியுள்ளார்.டெல்லி ராஜஸ்தான் எல்லையில் மார்ச் 23-ம்தேதி சென்றுகொண்டிருக்கும் போது தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ராஜஸ்தானுக்குள்ளும் அனுமதி இல்லாமலும், டெல்லிக்கு திரும்பி செல்லவும் அனுமதி இல்லாமலும் டெல்லி ராஜஸ்தான் எல்லையில் சிக்கியுள்ளார் சுனில். வேறு வழியின்றி தன்னுடைய லாரியிலேயே தங்கியுள்ளார்.
கிட்டத்தட்ட 40 நாட்கள் இரவு பகலாக லாரியில் நேரத்தை செலவழித்துள்ளார் சுனில். இது குறித்து தெரிவித்துள்ள அவர், நான் லாரியில் அரிசியும், ஸ்டவ் அடுப்பும் வைத்திருந்தேன். அதை வைத்து சமைத்துக்கொண்டேன். ஆனால் சில நாட்களில் பொருட்கள் தீர்ந்துபோயின. பின்னர் அருகில் உள்ள கடையில் மளிகைப்பொருட்களை வாங்கிக் கொண்டேன். பகல் எது இரவு எது என்ற வித்தியாசமெல்லாம் தெரியவில்லை. சில நாட்கள் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு இரவை கழிப்பேன்.
ஏப்ரல் 24ம் தேதி ஊரடங்கு முடிந்துவிடும் என்று நம்பினேன். ஆனால் மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. சில நேரங்களில் போனுக்கு சார்ஜ் ஏற்றமுடியாது. குடும்பத்தினருடன் பேச முடியாமல் இருப்பேன். இந்த 40 நாட்களில் என் மனதில் ஏதேதோ எண்ணங்கள் ஓடும். என் குடும்பத்தினரை பார்க்க முடியாமல் நான் தவித்தேன். குறிப்பாக என்னுடைய கர்ப்பிணி மனைவியை பார்க்க முடியாமல் வாடினேன். வீட்டிற்குச் செல்ல முடியுமா முடியாதா என்று யோசித்தேன்.
40 நாட்கள் கடந்த நிலையில் தான் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டது. என் வாகனத்துடன் நான் மே 5ம் தேதி டெல்லிக்குச் சென்றேன். அங்கு வாகனத்தை ஒப்படைத்துவிட்டு நான் மே9-ம் தேதி சொந்த ஊருக்கு வந்தேன். எனக்கு கொரோனா சோதனைகள் எடுக்கப்பட்டதில் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டது. ஆனாலும் நான் 14 நாட்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
இப்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் வீட்டில் இருக்கிறேன். இனி என் மனைவியின் பிரசவத்திற்கு பிறகே நான் டெல்லி செல்வேன்.இப்போது நான் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கிறேன். சில நேரம் இப்போதும் லாரியில் தூங்குவது போலவே இருக்கும்” என தெரிவித்துள்ளார்.