''ராமானுஜர் சிலை 'மேட் இன் இந்தியா' அல்ல, மேட் இன் சீனா'' - ராகுல் காந்தி சாடல்

''ராமானுஜர் சிலை 'மேட் இன் இந்தியா' அல்ல, மேட் இன் சீனா'' - ராகுல் காந்தி சாடல்
''ராமானுஜர் சிலை 'மேட் இன் இந்தியா' அல்ல, மேட் இன் சீனா''  - ராகுல் காந்தி சாடல்

சுயசார்பு இந்தியா என மத்திய அரசு பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், பிரதமர் மோடி அண்மையில் திறந்து வைத்த சமத்துவத்துக்கான சிலை சீனாவில் உருவாக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் வைணவ ஆச்சார்யார்களில் முக்கியமானவராக திகழும் ராமானுஜருக்கு 216 அடி உயரத்தில் ஐம்பொன் சிலை அமைக்கப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திறந்து வைத்தார். சமத்துவத்துக்கான சிலை என பெயரிடப்பட்ட ராமானுஜர் சிலையை இந்தியாவில் வடிக்கவில்லை என்றும் மாறாக சீனாவில் வடிக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், எதற்கெடுத்தாலும் சுயசார்பு இந்தியா என பரப்புரை மேற்கொள்ளும் மத்திய அரசு, ராமானுஜர் சிலையை வடிக்கும் பணியை மட்டும் ஏன் சீனாவிடம் ஒப்படைக்க அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய போது கூட, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் அமைப்பு சாரா துறைகள் தான் சுயசார்பு திட்டத்திற்கு அதிகமாக பங்களித்து வருகின்றன என்றும், ஆனால், மத்திய அரசு சிறு, குறு, நடுத்தர தொழில்களை புறக்கணித்து அவற்றை அழித்து வருகிறது என்றும் குற்றம்சாட்டியிருந்தார். சிறு தொழில்களுக்கு ஆதரவு அளித்தால் மட்டுமே மேட் இன் இந்தியா என்ற முழக்கம் சாத்தியமாகும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com