உ.பி-7, தமிழ்நாடு-1... மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மாநில பிரதிநிதித்துவம் எப்படி?

உ.பி-7, தமிழ்நாடு-1... மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மாநில பிரதிநிதித்துவம் எப்படி?
India
IndiaIndia

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகனும் மத்திய இணையமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இதில், தற்போது புதிதாக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற 36 பேர்களில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து 7 அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடக மாநிலங்களில் இருந்து தலா 4 பேரும், குஜராத்தில் 3 பேரும், மத்தியப் பிரதேசம், பீகார், ஒடிசா மாநிலங்களில் இருந்து தலா 2 பேரும் அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ராஜஸ்தான், அஸ்ஸாம், டெல்லி, தமிழ்நாடு, ஜார்க்கண்ட், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 36 பேர் மத்திய அமைச்சரவையின் புதிய அமைச்சராக தேர்வாகியுள்ளனர். 

குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், நாராயண தாட்டூ ரானே, சர்பானந்த சோனாவால், வீரேந்திர குமார், ஜோதிராதித்ய சிந்தியா, ராமச்சந்திர பிரசாத் சிங் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

அஷ்வினி வைஷ்ணவ், பாசுபதி குமார் பரஸ், கிரண் ரிஜிஜூ, ராஜ்குமார் சிங், ஹர்தீப் சிங் புரி மற்றும் மன்சுக் மான்டவியா, புபேந்தர் யாதவ் ஆகியோரும் மத்திய அமைச்சர்களாகியுள்ளனர். புருஷோத்தம் ருபலா, கிஷன் ரெட்டி, அனுராக் சிங் தாக்கூர், பங்கஜ் சவுத்ரி, அனுப்ரியா சிங் படேல், சத்யபால் சிங் பாகல், ராஜிவ் சந்திரசேகர், ஷோபா கரன்ட்லஜே, பானு பிரதாப் சிங் வர்மா, தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், மீனாக்ஷி லேகி, அன்னபூர்ணா தேவி, நாராயணசாமி, கவுசல் கிஷோர், அஜய் பட், B.L. வர்மா, அஜய் குமார், சவுகான் தேவுசின்ஹ், பாக்வந்த் கூபா ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். கபில் மோரேஷ்வர் பட்டீல், பிரதீமா பௌமிக், சுபாஷ் சர்கார், பாகவத் கிஷன்ராவ் கரட், ராஜ்குமார் ரஞ்சன் சிங், பாரதி பிரவின் பவார் ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

பிஷ்வேஸ்வர் டூடூ , ஷாந்தனு தாக்கூர், முன்ஜாபரா மஹேந்திரபாய், ஜான் பார்லா, மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன், நிஷித் பிரமானிக் ஆகியோரும் விரிவாக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

பிரதமர் மோடி தலைமையில் புதிதாக அமைந்துள்ள இந்த அமைச்சரவையில் தற்போது 11 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏற்கனவே நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா சிங் என 4 பெண் அமைச்சர்கள் இருந்த நிலையில், தற்போது, அனுபிரியா சிங் படேல், ஷோபா கரண்லாஜே, தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், மீனாட்சி லேகி, அன்னபூர்ணா தேவி, பிரதிமா பவுமிக், பாரதி பிரவின் பவார் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 6 மருத்துவர்களும், 5 பொறியாளர்களும் மத்திய அமைச்சர்களாகியிருக்கிறார்கள். புதிதாக பதவியேற்ற 43 அமைச்சர்களில் 15 பேர் கேபினட் அமைச்சர்கள், 28 பேர் இணை அமைச்சர்கள். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் இணை அமைச்சராக பதவியேற்றுள்ளார். மத்திய இணை அமைச்சர்களாக இருந்த 7 அமைச்சர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com