கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் மாநில அரசுகள்

கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் மாநில அரசுகள்
கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கும் மாநில அரசுகள்

கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாவதை தடுக்க, சில மாநில அரசுகள் தாமாக முன்வந்து அவர்களின் கல்வித்தொகையை ஏற்றுக்கொண்டுள்ளது. அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

கொரோனா இரண்டாவது அலையில் நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருகின்றனர். முதல் அலையைவிடவும் இரண்டாவது அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இளைஞர்கள் என்ற பட்டியலில், சிறு குழந்தைகளின் பெற்றோர் பலரும் உட்படுகின்றனர் என்பது வருத்தம் தரக்கூடிய உண்மை. ஒரு சில குழந்தைகளுக்கு, பெற்றோரில் ஒருவரும், இன்னும் சிலருக்கு இருவருமே இறக்கின்றனர்.

இதனால் இந்தியாவில் பல குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்கின்றன தரவுகள். ஆதரவற்ற இக்குழந்தைகளை, பொருளாதார சிக்கல்களை காரணமாக சொல்லி உறவினர்கள்கூட ஏற்றுக்கொள்ள தயங்குவதாக இவர்களை மீட்கும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் பதிவுசெய்துள்ளனர். ஆகவே அரசு சார்பில் இக்குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இப்போதைக்கு கொரோனாவை கடப்பதே முதல் நோக்கம் என பல மாநில அரசுகள் போராடிக்கொண்டிருக்கும் நேரத்தில், டெல்லி அரசாங்கம் இக்குழந்தைகள் நலனும் முக்கியமென எண்ணி, அவர்கள் மீது கவனம் கொண்டுள்ளது. அதன் விளைவாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "இரு பெற்றோரையும் கொரோனாவால் இழந்த குழந்தைகளுக்கு, அவர்கள் எதிர்காலத்தில் கல்வி கேள்விக்குறியாகும் அபாயம் அதிகம் உள்ளது. ஆகவே அதை கருத்தில்கொண்டு, இக்குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் கல்வி இலவசாக அளிக்கப்படும். அவர்களின் கல்வி செலவை அரசாங்கமே முழுமையாக ஏற்கும். இக்குழந்தைகள், உங்களை ஆதரவற்றோர் என நினைத்துக்கொள்ள வேண்டாம். நானும், இந்த அரசாங்கமும் உங்களுக்காக உங்களுடனேயே இருக்கிறோம்" என கூறியிருக்கிறார்.

முன்னராக நேற்றைய தினம் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங், இதேபோன்றதொரு திட்டத்தை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேச அரசின் சார்பில், இக்குழந்தைகளுக்கு மாதம் தோறும் ரூ.5000 ஓய்வூதியம் தருவதாக அறிவிக்கப்பட்டது. உடன், இக்குழந்தைகளுக்கு கல்வி இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் உதவித்தொகையாக 1 முதல் 8 ம் வகுப்புக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதம் 500 ரூபாயும், 9 முதல் 12 வகுப்புகுட்பட்ட குழந்தைகளுக்கு 1,000 ரூபாயும் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு கூறியது. தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகள் என்ற வித்தியாசமின்றி, அனைத்து பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கும் இந்த உதவிகள் தரப்படும் என சொல்லப்பட்டுள்ளது. உதவித்தொகை போலவே, ரேஷன் பொருள்களும் இக்குழந்தைகளின் குடும்பத்துக்கு இலவசம் என சொல்லப்பட்டுள்ளது.

சட்டிஸ்கர் மாநிலத்திலும், இப்படியான குழந்தைகளுக்கு கல்வி இலவசம் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. சட்டிஸ்கரிலும், மத்திய பிரதேசத்தை போலவே குழந்தைகளுக்கான உதவித்தொகைகளை அறிவித்துள்ளது. 

மாநில அரசுகளின் குழந்தைகள் மீதான இந்த பார்வைக்கு, பலரும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com