“கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா எதுவும் பேசவில்லை”- இலங்கை அமைச்சர் தொண்டமான்

கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என பாஜக அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், இதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கச்சத்தீவு
கச்சத்தீவுமுகநூல்

தமிழ்நாட்டின் பாம்பனுக்கும், இலங்கையின் டெல்த் தீவிற்கும் இடையே இருக்கும் சிறிய தீவுப்பகுதிதான் கச்சத்தீவு. இச்சிறிய தீவு 1974 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தலைமையில் ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இருப்பினும் 1974ஆம் ஆண்டில் ஒப்பந்தத்தின் கீழ் இந்திய மீனவர்களுக்கு சில உரிமைகள் அளிக்கப்பட்டிருந்தன. அந்த உரிமைகள், 1976ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டன. இப்படியாக அந்தத் தீவு மீதான உரிமையை இந்தியா முழுவதுமாக இழந்தது.

இப்படி கச்சத்தீவு இலங்கையின் வசம் சென்றதிலிருந்தே, எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறப்பட்டு அப்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் கைப்பற்றப்படுவதும் தொடர்கதையாகிவிட்டன. இதனால் மீனவர்கள் எதிர்கொள்ளும் துயரம், தீராத துயரமாக இன்றுவரை இருந்து வருகிறது. ‘எப்படியாவது கச்சத்தீவை மீட்டே தீருவோம்’ என அரசியல் தலைவர்கள் கடந்த காலங்களில் பலமுறை கூறியபோதிலும், அதில் தற்போது வரை எந்த முன்னேற்றமும் இல்லை.

வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இக்கச்சத்தீவு பிரச்னை தற்போது மீண்டுமொருமுறை பேசு பொருளாக உருவெடுத்துள்ளது. இதை இம்முறை தொடங்கிவைத்தது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

அண்ணாமலை
அண்ணாமலைPT

அதன்படி ‘ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்கள்’ எனக்கூறி கச்சத்தீவு தொடர்பான சில தகவல்களை அண்மையில் பகிர்ந்திருந்தார் அண்ணாமலை.

கச்சத்தீவு
”முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒப்புதலுடனே கச்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது” - அண்ணாமலை

இதை அடிப்படையாக வைத்து, “காங்கிரஸ் கட்சிதான் கச்சத்தீவினை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு அலட்சியமாக தாரை வார்த்து கொடுத்துள்ளது. இதற்கு, அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவும் முதல்வர் கருணாநிதியும் உறுதுணையாக இருந்துள்ளனர்” என பாஜக மூத்த தலைவர்கள் பலரும் தொடர் குற்றசாட்டினை முன்வைத்து வந்தது.

இதற்கு எதிர்த்தரப்பு வாதமாக காங்கிரஸ், திமுக கட்சிகள், “மத்தியில் 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் உள்ள பாஜக அரசு கச்சத்தீர்வு விவகாரத்தில் என்ன தீர்வு கண்டது?” என்று கேள்வி கேட்டு வருகின்றன.

கச்சத்தீவு
"கச்சத்தீவு; தமிழக மீனவர் பிரச்னைக்கு பாஜகவே காரணம்" - வரலாற்றை விளக்கும் பத்திரிகையாளர் அய்யநாதன்!

இதற்கு பதிலளிக்கும் விதமாக, ‘தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண கச்சத்தீவு திரும்ப பெறப்பட வேண்டும். கச்சத்தீவை மீட்கும் விவகாரத்தில் நமக்கு முழு உரிமை உள்ளதால் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். கச்சத்தீவு மீட்பு தொடர்பாக மத்திய அரசு பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது’ என அண்ணாமலை சமீபத்தில் கூறியிருந்தார்.

மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பேசுகையில், “கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தெரிவித்திருக்கிறார். கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் கடந்த 20 ஆண்டுகளில் 6,180 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முறையும் மத்திய அரசின் நடவடிக்கையால்தான் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்” என தெரிவித்தார்.

இந்நிலையில் இதுவரை இந்திய அரசு தரப்பிலிருந்து கச்சத்தீவு தொடர்பாக தங்களுக்கு கோரிக்கை எதுவும் வரவில்லை எனக்கூறியுள்ளது இலங்கை அரசு.

இது தொடர்பாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது என்னவென்றால், “கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் எங்களுக்கு அனுப்பவில்லை. கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை. அப்படி அனுப்பி இருந்தால், அதற்கு இலங்கை வெளியுறவுத்துறை உரியவகையில் பதில் அளிக்கும். இலங்கையைப் பொறுத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது” என்பது.

இதையடுத்து இவ்விவகாரம் அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. மேற்கொண்டு இந்திய அரசு கச்சத்தீவை இலங்கை அரசிடம் கோருமா? அல்லது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com