ஐஏஎஸ் தேர்வில் சாதித்துகாட்டிய பழங்குடியினப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்

ஐஏஎஸ் தேர்வில் சாதித்துகாட்டிய பழங்குடியினப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்
ஐஏஎஸ் தேர்வில் சாதித்துகாட்டிய பழங்குடியினப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்

கேரள குரிசியா பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ஸ்ரீதன்யா சுரேஷ் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் நாடு முழுவதும் இருந்து 759 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்தத் தேர்வில் தடைகளைத் தாண்டி சாதித்த பழங்குடியின பெண்ணாக திகழ்கிறார் ஸ்ரீதன்யா சுரேஷ். கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்தவர் இவர். இவரது தந்தை, சுரேஷ். தாயார் கமலம். இவர்கள் இருவருமே கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் கேரளாவிலுள்ள குரிசியா பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள். 

இவர் கரையான் அரித்த ஒலை வீட்டில் வசித்து வருகிறார். இந்தக் குடும்ப வறுமையிலும் எப்படியாவது கலெக்டர் ஆக வேண்டும் என்ற தீரா கனவுடன் படித்துவந்தார். இவரது கனவிற்கு அவரது பெற்றோரும் உறுதுணையாக இருந்துள்ளனர். இந்தத் தேர்விற்கு தயாராக போதிய பணமில்லாததால் இவரின் பெற்றோர் அக்கம் பக்கத்தினரிடமிருந்து கடன் வாங்கி இவரை படிக்க வைத்துள்ளனர். 

இந்நிலையில் இந்தாண்டு தேர்வில் தடைகளை எல்லாம் தவிடுபொடியாக்கி வெற்றிப் பெற்றுள்ளார் ஸ்ரீதன்யா சுரேஷ். இதுகுறித்து அவர், “நான் கேரளாவில் மிகவும் பின் தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்தவள். இந்தப் பகுதியிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக யாருமில்லை. இந்தப் பழங்குடியினர் வகுப்பிலிருந்து நான் பெற்ற வெற்றி மற்றவர்களுக்கு பெரிய ஊக்கமாக அமையும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

சாதிக்க நினைப்பவர்களுக்கு தடைகள் எப்போதும் சிறிய தூசிதான் என்பதற்கு ஸ்ரீதன்யாவின் வெற்றி ஒரு சான்றாக உள்ளது. விடாமுயற்சியும் கனவை நோக்கிய பயணமும் முழுமையாக இருந்தால் வெற்றி கைக்கு எட்டும் தூரத்தில்தான் இருக்கும் என்னும் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்கிறார் ஸ்ரீதன்யா.

தேர்வில் வெற்றிப் பெற்ற ஸ்ரீதன்யா சுரேஷிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், “ஸ்ரீதன்யா மிகவும் பின் தங்கிய சமூகத்திலிருந்து தடைகளை உடைத்து சாதனைப் படைத்துள்ளார். இவரின் சாதனை மற்றவர்களுக்கு நல்ல தூண்டுகோளாக அமையும்” எனக் கூறி வாழ்த்தியுள்ளார். அதேபோல காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, “ஸ்ரீதன்யாவின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் தான் அவர் வெற்றிப் பெறுவதற்கான காரணம். அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்”எனக் கூறியுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com