கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.20 - மோடியின் 'நம்பிக்கை' உரை முதல் இரவு நேர ஊரடங்கு வரை!
> கொரோனா 2-ம் அலை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, "பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் உயிர்களைக் காக்க வேண்டும் என்பதே அரசின் முயற்சி எடுத்து வருகிறது. தைரியத்தையும் அனுபவத்தையும் வைத்து மட்டுமே கொரோனா பிரச்னையை எதிர்கொள்ள முடியும். கொரோனா கட்டுப்பாட்டு மையங்களை அதிகரிப்பதன் மூலமும், கூட்டு முயற்சியாக செயல்படுவதன் மூலமும் நாடு முழுவதும் முழு முடக்கம் வருவதைத் தடுக்க முடியும். பொது முடக்கத்தை அமல்படுத்தும்போது மாநில அரசுகள் அதை கடைசி ஆயுதமாகவே பயன்படுத்த வேண்டும்" என்றார். இதன்மூலம் இப்போதைக்கு லாக்டவுன் இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
> தமிழகத்தில் இரவு நேர பொதுமுடக்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 10 மணிக்கு அமலுக்கு வருகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடைகளை 9 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கை மீறி வெளியே சுற்றுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஊரடங்கின்போது பாதுகாப்பு பணியில் 2,000 காவல்துறையினர் ஈடுபடுவார்கள் என்றும், சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் மூடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். விமான நிலையம், அல்லது ரயில் நிலைங்களுக்குச் செல்பவர்கள், தங்களின் பயணிச்சீட்டுகளைக் காண்பித்துவிட்டு செல்லலாம் என்றும் காவல் ஆணையர் கூறியுள்ளார்.
> 50 சதவிகித படுக்கைகளை கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு ஒதுக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதால் கூடுதல் படுக்கைகள் ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்ற சிகிச்சைகளுக்கு உள்புற நோயாளியாக அனுமதிப்பதை தள்ளி வைக்கவும் மருத்துவமனைகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
> தமிழகத்தில் அதிக அளவு உறுப்பினர்களை கொண்ட, தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் பகல் நேரத்தில் ஆம்னி பேருந்துகள் ஓடும் என அறிவித்துள்ளது. தங்கள் அமைப்பில் 400-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ள அச்சங்கத் தலைவர் அப்சல், பகல் நேங்களில் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறியுள்ளார். முன்னதாக, பயணிகள் வருகை குறைவாக இருப்பதால் ஆம்னி பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கப் பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார். ஆம்னி பேருந்து சங்கங்கள் இரு வேறு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் தனியார் பேருந்துகளை நம்பி பயணம் செய்ய இருக்கும் பொதுமக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
> கொரோனா தடுப்பூசியை அதிகளவு வீணாக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொரோனா தடுப்பூசியை பல மாநிலங்கள் வீணடித்து இருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் 11 நிலவரப்படி 10 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் பல மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில் 44 லட்சத்திற்கும் அதிகமான மருந்துகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தமிழகத்துக்கு வழங்கப்பட்ட மொத்த மருந்துகளில் 12 புள்ளி 10 சதவீத தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளன. அரியானாவில் 9.74 சதவீதமும், பஞ்சாப்பில் 8.12 சதவீதமும், மணிப்பூரில் 7.8 சதவீதமும் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளன. தெலங்கானா மாநிலத்தில் 7.8 தடுப்பூசிகள் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் கேரளா, மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், மிசோரம், கோவா, அந்தமான், நிக்கோபார் மற்றும் லட்சத் தீவுகள் தடுப்பூசிகளை வீணாக்காமல் பயன்படுத்தியுள்ளன.
> தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடே இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தமிழகத்தில் நாள்தோறும் 400 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. 240 டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. மாநிலத்தில் 1200 டன் ஆக்சிஜன் இருப்பு வைக்கும் அளவுக்கு திறன் உள்ளது' என்றார். வரும் 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளதால் மருந்துகள் வீணாவது குறைக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
> தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 80,000-ஐ நெருங்கியது. இதில் சுமார் 30 சதவீதம் பேர் சென்னையில் உள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து 3ஆவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 11,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,986 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 411 சிறார்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையிலான மொத்த கொரோனா 10,13,378 ஆக அதிகரித்துள்ளது. எனினும் ஆறுதல் அளிக்கும் வகையில், ஒரேநாளில் 6,250 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துளனர். இதுவரை 9,20,369 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,205 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 79,804 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 30 சதவிகிதம் பேர், அதாவது 28,005 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 3,711 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,029 பேரும், கோவை மாவட்டத்தில் 686 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 508 பேரும், சேலம் மாவட்டத்தில் 383 பேரும், மதுரை மாவட்டத்தில் 366 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
> தமிழக திரையரங்குகளில் தினசரி மூன்று காட்சிகளை திரையிடுவது என திரையரங்கு உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் தற்போதைய விதிகளை பின்பற்றி திரையரங்குகளை தொடர்ந்து இயக்குவது என முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிப்பதுடன் மூன்று காட்சிகள் மட்டும் திரையிடப்படும். இதற்கான நேரம் திரையரங்குகள் நிர்ணயம் செய்துகொள்வார்கள் என கூறப்படுகிறது. ஆனால், இரவு 9.30 மணிக்குள் அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் புதிய அரசு அமைந்தவுடன் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
> இரவு நேர ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இரவு நேரங்களில் இயக்கப்பட்டு வந்த விரைவுப் பேருந்துகள் பகல் நேரங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேட்டில் இருந்து வழக்கமாக இரவு நேரங்களில் புறப்படும் பேருந்துகள் அனைத்தும், இன்று அதிகாலை முதல் இயக்கப்பட்டு வருகின்றன. நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் அரசு விரைவுப் பேருந்துகள் அதிகாலை முதல் காலை வரை இயக்கப்பட்டன. அதேபோல புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வெளியூர் பேருந்துகளும் பகல் நேரத்தில் இயக்கப்படுகின்றன. ஆம்னி பேருந்துகளும் பகல் நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், வழக்கத்தை விட பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் மிகக்குறைவாகவே இருந்தது. இதே போல நெல்லை மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் பகல் நேரத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. பகல் நேரம் காரணமாக, பயணிகள் குறைவாகவே இருந்தனர். மதுரையிலிருந்து சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் அதிகாலை முதலே இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா நெருக்கடி காரணமாக பயணிகள் சமுக இடைவெளி பின்பற்றவும், முககவசம் அணிந்திருந்தால் மட்டுமே பேருந்துகளில் பயணிக்க போக்குவரத்து துறை அனுமதி அளிக்கிறது.
> காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார். அண்மையில் மேற்கு வங்க மாநிலத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்று வந்த நிலையில் ராகுல் காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகி செய்யப்பட்டிருக்கிறது.
> தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இந்த ஆண்டும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பள்ளி அளவில் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணான 35 மதிப்பெண்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. அந்தந்த பள்ளி அளவில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் இந்தத் தேர்வு கட்டாயமில்லை என்றும், குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணிலிருந்து கூடுதல் மதிப்பெண்களை பெற விரும்பும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பள்ளி அளவில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படலாம் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
> மேற்கு வங்கத்தில் மீதமுள்ள மூன்று கட்ட வாக்குப்பதிவை ஒரே கட்டமாக நடத்த திரிணாமுல் காங்கிரஸ், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. ஏற்கெனவே அங்கு 5 கட்ட தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், ஏப்ரல் 22, 26, 29ஆம் தேதிகளில் மூன்று கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மூன்று கட்ட வாக்குப்பதிவுகளையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
> கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கர்கள் இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளது. கட்டாயம் இந்தியாவிற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு கொண்ட பின்னர் செல்லுமாறு அறிவுரை வழங்கியுள்ளது.
> பிரிட்டனும், இந்தியாவை தடை செய்யப்பட்ட நாடுகள் பட்டியலில் இணைத்துள்ளது. பிரிட்டன், ஐயர்லாந்து நாட்டை சேராதவர்களும், பிரிட்டன் நாட்டவர்களும், இந்தியாவில் 10 நாட்கள் தங்கியிருந்தால், பிரிட்டனுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் தடை பட்டியலில் பாகிஸ்தான், வங்கதேசம், ஓமன், பிலிப்பைன்ஸ், கத்தார், தென் ஆப்ரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஜிம்பாபவே ஆகிய நாடுகளும் உள்ளன.
> வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 7 பேரும் வெவ்வேறு காரணங்களுக்காக உயிரிழந்ததாகவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இதற்கு காரணம் இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.