உ.பி.யில் காங்கிரஸ் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்படும்: குலாம் நபி ஆசாத்
உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் - மாயாவதி கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து இன்று அறிவிக்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவது என முடிவு செய்துள் ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இணைந்து நேற்று வெளியிட்டனர்.
மாநிலத்தில் மொத்தமுள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிட தீர்மானித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்த இந்தக் கட்சிகள் தனிக்கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்வதற்காக காங்கிரஸ் தலைவர்களின் கூட்டம் லக்னோவில் இன்று நடக்கிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் ராஜ்பாபர், மேலிட பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.