உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கொள்கை அளவில் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தான் மற்ற மாநிலங்களவை விட அதிக மக்களவை தொகுதிகள் உள்ளன. அதாவது மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜகவை வீழ்த்தும் பொருட்டு சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கொள்கை அளவில் முடிவு செய்திருப்பதாவும், கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்றும் சமாஜ்வாதி கட்சி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் நேரில் சந்தித்து பேசிய நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இச்சந்திப்பி்ன் போது இரு கட்சிகளும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரு கட்சிகளும் தலா 37 தொகுதிகளில் போட்டியிடுவது எனவும் மீதமுள்ள 6 தொகுதிகளை மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தருவது என முடிவாகியுள்ளதாக தெரிகிறது. இது குறித்த அதிகாரப்பூர அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதியும் கைகோர்த்துள்ளது மக்களவை தேர்தலில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி தனித்தே களம் காண திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.