’தென்னிந்தியர்கள் தகுதியற்றவர்கள்’ - வேலைவாய்ப்பு விளம்பரத்தால் கிளம்பிய எதிர்ப்பு!
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு எனப் பேசப்பட்டாலும், மாநில ரீதியாக மொழிகளாலேயே மக்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் வேலைவாய்ப்பு, கல்வி உள்ளிட்ட இதர சலுகைகள் பிறமொழியினருக்குக் கிடைப்பதில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதேபோன்ற சம்பவம் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளில் இடம்பெறுவது வாடிக்கையாகி இருப்பது பேசுபொருளாகி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு, ‘மெளனி கன்சல்டிங் சர்வீஸ்’ என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டேட்டா அனலிஸ்ட் பதவிக்கு 4 ஆண்டுகள் அனுபவமுள்ள தொழில்நுட்பத் தேவைகளுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ’இந்தி மொழி நன்றாகப் பேச, படிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், தென்னிந்தியர்கள் விண்ணப்பிக்கத் தகுதி இல்லை’ என்றும் பதிவில் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் இணையதளத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், பலரும் இதற்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.
சிலர் நிறுவனத்துக்கு ஆதரவாக, ’இந்தப் பணிக்கு இந்தி மிகவும் அவசியம் என்பதாலும், தென்னிந்தியர்களால் நுட்பமாக இந்தி பேச முடியாது’ என்று ஒருவர் பதிலளித்துள்ளார். இதற்கு மற்றொரு பயனர், ’தென்னிந்தியர்களில் நன்றாக இந்தி தெரிந்தவர்களும் உள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். மேலும், ’சொந்த நாட்டுக்குள்ளேயே பாகுபாடு காட்டுவது நியாயமா’ என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இதுபோன்ற செயல்களை நிறுத்த வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.