கருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு - சோனியா காந்தி
தந்தையை போன்ற கருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் தனக்கு பேரிழப்பு என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் சர்வதேச அரசியல் மற்றும் மக்கள் சேவையின் முகமாக திகழ்ந்தவர் கருணாநிதி. தனது வாழ்க்கையை சமூக நீதிக்காகவே அர்ப்பணித்தவர் திமுக தலைவர் கருணாநிதி. சமூக நீதி, சமத்துவம், வளர்ச்சி ஆகியவற்றிற்காக பாடுபட்டவர். ஒவ்வொரு குடிமக்களுக்காகவும், குறிப்பாக ஏழை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுத்தவர். தமிழ் இலக்கியத்திற்கும் மிகப்பெரிய பங்காற்றியுள்ளார்.
தந்தையை போன்ற கருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் சென்னை வந்து பார்த்தார். அப்போது, தனது தாய் சோனியா காந்தி மற்றும் குடும்பத்தார் சார்பில் வருத்தத்தை பதிவு செய்தார். தற்போது, கருணாநிதியின் உடலுக்கும் அவர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.