ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் - சோனியா காந்தி உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் - சோனியா காந்தி உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் - சோனியா காந்தி உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?

உதய்பூரில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி 3 நாட்கள் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கியுள்ள காங்கிரஸ் கட்சியின் இந்த சிந்தனை அமர்வு கூட்டத்தில் தொடக்க உரை ஆற்றிய சோனியா காந்தி, நாட்டில் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சோனியா காந்தி குற்றச்சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ‘’தேசத் தலைவர்களை கொலை செய்தவர்கள் இன்று கொண்டாடப்படுகிறார்கள். ஜனநாயகத்திற்கு குரல் கொடுப்போர் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

இந்த சிந்தனை அமர்வு கூட்டத்தில் பங்கேற்கும் எந்த நிர்வாகியும் செல்போன்களை எடுத்துவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அடுத்தத் தலைவர் யார் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அதிருப்தி தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் இந்த கூட்டத்தில் முன்னெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக காந்தி குடும்பத்தின் தலைமையிலேயே காங்கிரஸ் கட்சி இயங்கும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தொடக்க உரையும், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நன்றியுரையும் ஆற்றுகின்றனர். புதிய உறுதியுடன் வெற்றிக்கான பாதையை கண்டறிவதே சிந்தனை அமர்வின் முக்கிய அம்சமாகும். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், மாநில காங்கிரஸ் தலைவர்கள், சட்டமன்ற குழு தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், மாநில பொறுப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 430க்கும் மேற்பட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் எதிர்கால யுக்திகள், பொது பிரச்னைகள், செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்க கூடும் என தெரிகிறது. இவை தவிர, நாட்டின் இப்போதைய அரசியல், பொருளாதாரம், சமூக பிரச்னைகள், விவசாயம், வேலைவாய்ப்பு, பொதுத்துறை நிறுவன பிரச்சனைகள் குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com