"விவசாயிகள் அங்கே போராடுகிறார்கள்; எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்" - சோனியா காந்தி
விவசாயிகள் போராட்டம் மற்றும் கொரோனா நெருக்கடி நிலை ஆகிய காரணங்களால் டிசம்பர் 9-ஆம் தேதி வரும் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்துள்ளார்.
காங்கிரஸ் மேலிடத்திலிருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி “ நாடு முழுவதும் நிலவும் கொரோனா நெருக்கடி நிலை மற்றும் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் விவசாயிகளின் போராட்டங்கள் காரணமாக இந்த ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி வரும் சோனியா காந்தியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று அனைத்து காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்துள்ளோம்” எனக் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விவசாயிகள் கடும் குளிரில் சாலைகளில் அமர்ந்து போராடும்போது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று சோனியாகாந்தி தெரிவித்ததாகவும், இதனால் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கேக் வெட்டுதல் உட்பட எந்த பிறந்தநாள் கொண்டாட்டமும் வேண்டாம் என்று காங்கிரஸ் பொறுப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன