காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளுக்கு, பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அகில இந்தியா காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தி, தனது 71 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட அனைவரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் முன்பு குவிந்த காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் சோனியா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில், சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதே போல் திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். பிற கட்சி நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களும் சோனியாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.