”அறிவிக்கப்படாத அவசரநிலை..” சோனம் வாங்சுக் எச்சரிக்கை!! மீண்டும் உண்ணாவிரதம்?
இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாகக் குற்றம்சாட்டியுள்ள லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் நாளைக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காலவரையற்ற உண்ணாவிரதம் அல்லது பாதயாத்திரைப் போராட்டத்தைத் தொடங்கப் போவதாக எச்சரித்துள்ளார்.
நீட் முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர பிரதான் பதவி விலகக் கோரி, டெல்லியில் கடந்த ஜூன் மாதம் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியது கரப்பான் ஜனதா கட்சி. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக் உரிமைப் போராளி சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது நாடு முழுவது கவனத்தை ஈர்த்தது. இந்தச்சூழலில், கடந்த ஜூலை மாதம் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இதன்மூலம் கரப்பான் ஜனதா கட்சியின் போராட்டம் வெற்றி பெற்றது.
இந்தச் சம்பவம் முடிவடைந்த சில மாதங்களிலேயே, SIR விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக பல்வேறு முடிவுகளை எடுத்ததாக, மற்ற இரு தேர்தல் ஆணையர்கள் குற்றம் சாட்டியது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி விலக வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடைபெறும் என கரப்பான் ஜனதா கட்சி அறிவித்தது.
ஆனால், இந்தப் போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை தடை விதித்த நிலையில், மத்திய அரசும் போராட்டத்தைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஜந்தர் மந்தரில் குவிக்கப்பட்டனர். நேற்று இரவில் இருந்து, இன்று காலை வரை டெல்லி வந்து சேரும் பல விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டன. இந்தச்சூழலில் தான், டெல்லி விமான நிலையத்திலேயே கரப்பான் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கே தடுத்து நிறுத்தப்பட்டார். தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்களான மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 5,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில் தான், அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி தான் முன்னதாகப் பதிவிட்டிருந்ததாகக் குறிப்பிட்ட சோனம் வாங்சுக், இந்தியா அறிவிக்கப்படாத அவசரநிலையில் உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இத்தகைய சூழல் உருவாகும் என எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், கைது செய்யப்பட்டவர்கள் நாளை, அதாவது அக்டோபர் 11ஆம் தேதிக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காலவரையற்ற உண்ணாவிரதம் அல்லது பாதயாத்திரைப் போராட்டம் மேற்கொள்வது குறித்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

