காஷ்மீர்: கர்ப்பிணியை தோளில் சுமந்துசென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்! தாயும், சேயும் நலம்

காஷ்மீர்: கர்ப்பிணியை தோளில் சுமந்துசென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்! தாயும், சேயும் நலம்
காஷ்மீர்: கர்ப்பிணியை தோளில் சுமந்துசென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்! தாயும், சேயும் நலம்

காஷ்மீரில் கர்ப்பிணிப் பெண்ணை ராணுவ வீரர்கள் தோளில் சுமந்து சென்று தாயையும் சேயையும் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று, காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பதாகிட் என்ற கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் மருத்துவ உதவிக்காக காத்திருந்தார். ஆனால் பனிப் பொழிவால் வாகனங்கள் வராததையடுத்து, ராணுவ மையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த ராணுவ வீரர்கள் அந்தக் கர்ப்பிணிப் பெண்ணை கொட்டும் பனிக்கு நடுவே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் தங்கள் தோள்களில் தூக்கிச் சென்றனர்.

பின்னர் அங்குள்ள பாலத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ஏற்றி அருகே உள்ள சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு கர்ப்பிணிக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பெண் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். அந்த பெண்ணின் குடும்பத்தினர், கர்ப்பிணியை தோளில் சுமந்து வந்து உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாலின் பகுதியைச் சேர்ந்த சகீனா என்ற கர்ப்பிணிப் பெண்ணை, ராணுவ வீரர்கள் 4 கிலோ மீட்டர் தூக்கிச் சென்று, பின்னர் ஆம்புலன்ஸில் ஏற்றிவைத்தனர். அதில் அவருடைய குழந்தை இறந்து பிறந்தது.

இதுகுறித்து அந்தப் பெண்ணின் கணவர், “கடும் பனி நிறைந்த குளிர்ந்த சாலையில் என் மனைவியை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல நீண்டநேரம் எடுத்தது. இதனால்தான் என் பெண் குழந்தையை இழக்க நேரிட்டது" என தெரிவித்திருந்தார். ஆனால் இதை மறுத்த மருத்துவமனை நிர்வாகம், “ஆம்புலன்ஸ் மூலம் சரியான முறையில் அந்தப் பெண் அழைத்து வரப்பட்டார். ஆனால், அவரது குழந்தை இயற்கையான காரணங்களால் இறந்துவிட்டது. ஆம்புலன்ஸ் சேவை தயார் நிலையிலேயே உள்ளது” எனத் தெரிவித்திருந்தது.

அதேநேரத்தில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அந்தப் பெண்ணை, மீண்டும் அவரது உறவினர்கள், தங்களது தோள்களில் சுமந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக உள்ளூர்வாசிகள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். என்றாலும், கர்ப்பிணிப் பெண்ணை ராணுவ வீரர்கள் தோளில் தூக்கிச் சென்ற புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இதேபோல், கடந்த மாதமும் ராணுவ வீரர்கள் கர்ப்பிணிப் பெண்ணை தோளில் தூக்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com