சோலார் பேனல்.. இலவச மிதி வண்டி... கொச்சி மெட்ரோவின் புதுமை

சோலார் பேனல்.. இலவச மிதி வண்டி... கொச்சி மெட்ரோவின் புதுமை
சோலார் பேனல்.. இலவச மிதி வண்டி... கொச்சி மெட்ரோவின் புதுமை

கேரள மாநிலம் கொச்சியில் பிரதமர் மோடி மெட்ரோ ரயில் சேவையை வரும் சனிக்கிழமை தொடங்கி வைக்க உள்ளார். ஏற்கனவே 7 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இருக்கும் நிலையில் 8-ஆவது நகரமாக தொடங்க உள்ள கொச்சி மெட்ரோ ரயில் பல சிறப்பம்சங்களைக் கொண்டது.

சோலார் ஆற்றல், இலவச மிதிவண்டி

இந்தியாவில் எந்தவொரு மெட்ரோவிலும் இதுவரை இல்லாத அளவிற்கு கொச்சி மெட்ரோ ரயில் நிலையங்களில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மொத்தமுள்ள 23 ரயில் நிலையங்களிலும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. சூரிய சக்தி ஆற்றல் மூலம் மொத்தம் 2.3 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இது மெட்ரோ ரயில் சேவையின் மின்சார தேவையை பாதியாக குறைக்க உதவும். கொச்சி மெட்ரோ நிர்வாகம் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இலவசமாக மிதிவண்டி சேவைவை வழங்குகிறது. இதன்மூலம் பயணிகள் எந்தவித செலவுமின்றி மிதிவண்டி மூலமாக நகரத்தை சுற்றி பார்க்க முடியும்.

குறைந்த கால திட்டம்

கொச்சியில் வெறும் 45 மாதத்தில் 13 கிலோ மீட்டர் தொலைவுள்ள மெட்ரோ ரயில் பணிகள் முடிவுக்கு வந்துள்ளன. மும்பையில் முதற்கட்டமாக 11 கி.மீ தொலைவில் தொடங்கப்பட்ட மெட்ரோ பணிகள் முடிவடைய ஆகிய காலம் 75 மாதங்கள். சென்னையை பொறுத்தவரை முதற்கட்ட மெட்ரோ ரயில் சேவை முடிவடைய எடுத்துக்கொண்ட காலம் 72 மாதங்கள். 8.5 கி.மீ தொலைவிற்கான மெட்ரோ பணிகளுக்கு டெல்லியும், பெங்களூருவும் 50 மாதங்களை எடுத்துக்கொண்டன. ஆனால் கொச்சி மெட்ரோ குறைந்த காலத்தையே எடுத்துக் கொண்டது.

திருநங்கைகளுக்கு அங்கீகாரம்

அதிகப்படியான திருநங்கைகளுக்கு பணி வழங்கிய பெருமையையும் கொச்சி மெட்ரோ தட்டிச் சென்றுள்ளது. கொச்சி மெட்ரோவில் மொத்தமாக 60 திருநங்கைகள் பணியமர்த்தப்பட உள்ளனர். கொச்சி மெட்ரோ வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 80 சதவிகித இடங்கள் வழங்கப்படுகிறது.

"வாட்டர் மெட்ரோ' என்ற பெயரில் விரைவில் படகு சவாரியையும் கொண்டு வர கொச்சி மெட்ரோ திட்டமிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com