அமித்ஷாவை சுற்றி வந்த சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கு - கடந்து வந்த பாதை..!
2005 ஆம் ஆண்டு நிகழ்ந்த சொராபுதீன் என்கவுண்ட்டர் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரையும் மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது 2005ஆம் ஆண்டு சொராபுதீன் ஷேக் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார். மோடியை கொலை செய்ய சதி என்ற சந்தேகத்தின் பேரில் என்கவுண்ட்டர் செய்ததாக குஜராத் காவல்துறை கூறியது. சொராபுதீன் ஷேக் மனைவி கௌசர் பி மற்றும் அவரது நண்பர் துளசிராம் பிரஜாபதியையும் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இவர்கள் மூவரும் போலி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி, அமித் ஷா உள்ளிட்ட 38 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அமித் ஷா உள்ளிட்ட 16 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரமில்லை என தெரிவித்து அவர்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்தது. எஞ்சிய 22 பேர் மீது மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரமில்லை என கூறி 22 பேரையும் மும்பை நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
சொராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கு கடந்து வந்த பாதை..
- 1. நவ.22 2005 - ஐதராபாத்தில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள சங்க்ளிக்கு சொராபுதீன், கௌசர் பி மற்றும் பிரஜாபதி மூன்று பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். பேருந்தினை இடைமறிந்து போலீசார் அவர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். சொராபுதீன் மற்றும் அவரது மனைவி ஒரு வாகனத்திலும், பிரஜாபதி மற்றொரு வாகனத்திலும் கொண்டு செல்லப்பட்டனர்.
- 2. நவ. 22-25, 2005 - சொராபுதீன் உள்ளிட்ட 3 பேரும் அகமதாபாத் அருகில் உள்ள ஒரு பண்ணைவீட்டில் வைக்கப்பட்டனர். பிரஜாபதி உதய்ப்பூரில் உள்ள சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் மீதான வழக்கில் விசாரணை நடத்தப்பட்டது.
- 3. நவ. 26, 2005 - சொராபுதீன் குஜராத் மற்றும் ராஜஸ்தான் போலீஸால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.
- 4. நவ. 29, 2005 - கௌசர் பி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது அவரது உடல் எரித்து அகற்றப்பட்டது
- 5. நவ. 27, 2006 - உதய்ப்பூர் மத்திய சிறையில் இருந்து பிரஜாபதியை ராஜஸ்தான், குஜராத் போலீஸ் குழு வெளியே எடுத்தது. குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் உள்ளது சர்ஹாத் பகுதியில் பிரஜாபதி என்கவுண்ட்டர் செய்யப்பட்டார்.
- 6. 20-05-2006 - சொராபுதீன் என்கவுண்ட்டர் குறித்தும், மாயமான கௌசர் பியை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சொராபுதீன் உறவினர்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். உச்சநீதிமன்றமும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு குஜராத் மாநில சிஐடிக்கு உத்தரவிட்டது.
- 7. ஏப். 30, 2007 - குஜராத் அரசு விசாரணை நடத்தி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில், கௌசர்பி இறந்துவிட்டதாகவும் அவரது உடல் எரிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
- 8. ஜன. 2010 - சொராபுதீன் என்கவுண்ட்டர் உள்ளிட்ட மூன்று வழக்குகளை சிபிஐயிடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்தது
- 9. ஜூலை 23, 2010 - அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா உள்ளிட்ட 38 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில், ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் கட்டாரியா மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.
- 10. ஜூலை 25, 2010 - அமித்ஷாவை சிபிஐ கைது செய்தது
- 11. அக். 8, 2010 - அமித்ஷாவின் ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
- 12. அக். 29, 2010 - குஜராத் உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் பிணையின் அடிப்படையில் அமித்ஷாவுக்கு ஜாமீன் வழங்கியது.
- 13. செப். 27, 2012 - முறையான விசாரணை நடக்க வேண்டும் என சிபிஐ கேட்டுக் கொண்டதால் வழக்கை குஜராத்தில் இருந்து மும்பைக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.
- 14. ஏப். 8, 2012 - சொராபுதீன் என்கவுண்ட்டர், அவரது மனைவி மற்றும் பிரஜாபதி ஆகியோர் தொடர்புடையை மூன்று வழக்குகளையும் உச்சநீதிமன்றம் ஒன்றாக இணைத்து உத்தரவிட்டது.
- 15. டிச. 30, 2014 - போலி என்கவுண்ட்டர் வழக்கில் இருந்து அமித்ஷாவை மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. அமித்ஷாவோடு, கட்டாரியா மற்றும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பலரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
- 16. நவ. 15, 2015 - அமித்ஷா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் சொராபுதீன் சகோதரர் ருபாபுதீன் முறையிட்டார். அதேமாதம், வழக்கை தொடர விரும்பவில்லை என்றும் தன்னுடைய மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் அவர் உயர்நீதிமன்றத்தில் கூறினார்.
- 17. டிச. 2015 - அமித்ஷா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சமூக செயற்பாட்டாளர் ஹரிஷ் மந்திர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்
- 18. ஏப். 2016 - வழக்கில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நபர் இல்லை எனக் கூறி, ஹரிஷ் மந்திரியின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உடனடியாக அவர் உச்சநீதிமன்றத்தை நாடினார்.
- 19. ஆக. 2016 - உச்சநீதிமன்றமும் ஹரிஷ் மந்திரியின் மனுவை தள்ளுபடி செய்தது.
- 20. அக். 2017 - 22 பேருக்கு எதிராக மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது
- 21. நவ. 2017 - சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜே.ஷர்மா தனது விசாரணையை தொடங்கினார்
- 22. செப். 2018 - மூத்த போலீஸ் அதிகாரிகள் பலர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது
- 23. நவ. 23 2018 - சாட்சிகள் மீதான விசாரணையை நீதிமன்றம் நிறைவு செய்தது
- 24. டிச. 5 2018 - அரசு தரப்பு மற்றும் மனுதாரர்களின் அனைத்து வாதங்களை நிறைவு செய்து தீர்ப்பை டிசம்பர் 21ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
- 25. டிச. 21 2018 - எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்களை வழங்க தவறிவிட்டதாக கூறி 22 பேரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது.