சொராப்தீன் போலி என்கவுண்ட்டர் வழக்கில் இருந்து பாஜக தலைவர் அமித்ஷா விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
குஜராத்தில் 2005ம் ஆண்டு நடந்த சொராப்தீன் போலி என்கவுன்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயா 2014ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நாக்பூரில் மர்ம மரணம் அடைந்தார். பி.ஜே.பி தலைவர் அமித்ஷா இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆவார். வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வெளியிடப்படும் நிலையில், நீதிபதி மரணம் அடைந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. லோயா இறந்த சில தினங்களில் டிசம்பர் 30-ம் தேதி வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், மும்பை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘வழக்கில் இருந்து அமித்ஷாவை விடுவித்து கீழமை நீதிமன்றம் பிறபித்த உத்தரவுக்கு எதிராக சிபிஐ போலீசார் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?. அமித்ஷா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனு நாளை மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
நீதிபதி லோயா மரணம் தொடர்பான ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரியும் மும்பை வழக்கறிஞர்கள் சங்கம் மனு தாக்கல் செய்துள்ளது. நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.