டெல்லியில் நிலவும் கடும் புகைமாசு: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தியா கேட், ராஜபாதை, துக்ளக் சாலை ஆகிய பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது.
பனிமூட்டம் மற்றும் புகை காரணமாக வாகன ஓட்டிகள் அவதியுற்றனர். டெல்லி விமான நிலையத்தில் 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ளதை காண முடியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்தது. நடப்பு ஆண்டில் நேற்று அதிகபட்ச பனிமூட்டம் நிலவியதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. பனிமூட்டம் காரணமாக டெல்லியில் பள்ளிகளுக்கு வரும் ஞாயிறு வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. மாசு அளவை குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக கார்களை ஒருநாள் விட்டு ஒருநாள் மட்டுமே இயக்க அனுமதிக்கும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக டெல்லி அரசு கூறியுள்ளது. மக்கள் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மற்ற பகுதிகளில் இருந்து டெல்லிக்கு வரும் 41 ரயில்கள் வழக்கத்தை விட மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தன. புகை மாசு காரணமாக 9 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.