எடை குறைஞ்சது, ஆனால் கால் போச்சே: குண்டுப் பெண்மணியின் சோகம்
சிகிச்சையால் உடல் எடை குறைந்த குண்டுபெண்மணியால் இனி நடக்கவே முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைக்குப் பின், எகிப்தைச் சேர்ந்த உலகின் அதிக எடை கொண்ட பெண்மணியான இமான் அஹமதுவின் உடல் எடை 500 -இல் இருந்து 242 ஆக குறைந்துள்ளது.
இமான் அகமதுக்கு சிகிச்சை அளித்துவரும் மும்பையைச் சேர்ந்த எடை குறைப்பு நிபுணரான முபாஸல் லக்டாவாலா, ”திரவ உணவு மற்றும் பிசியோதெரபி உள்ளிட்ட எடை குறைப்புக்கான தொடக்க நிலை சிகிச்சையில் அவரது உடல் எடை 120 கிலோ வரை குறைந்தது. உணவை உட்கொள்வதில் அவருக்கு இருந்த சிரமங்களும் சரிசெய்யப்பட்டுள்ளன. சிலமுறை இமானுக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் மரபணு தொடர்பான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, தொடர்ந்து எடை குறைப்புக்கான சிகிச்சை மேற்கொள்ளப்படும். இனிமேல் அவர் உலகின் குண்டு பெண்மணியல்ல. இமானின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் தொடர்ந்து 25 ஆண்டுகளாக படுக்கையிலேயே இருந்ததால் இனி அவரால் எழுந்து நடக்க முடியாது எனக் கூறப்படுகிறது.
’இமானுக்கு பதினோறு வயதிலேயே பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரது கால் நரம்புகளில் பிரச்னை இருக்கிறது. இப்போது அதற்கான சிகிச்சை அளித்தும் அது சரியாக வேலை செய்யவில்லை. அவரால் உட்கார முடியும். ஆனால் நடிப்பது கடினம்’ என்று டாக்டர் முபாஸல் லக்டாவாலா தெரிவித்துள்ளார்.