முறிந்தது பாஜக - சிவசேனா கூட்டணி : மத்திய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்தார் சிவசேனா எம்.பி..!
மத்திய அமைச்சரவையில் பாஜக - சிவசேனா கூட்டணி முறிந்தது. இதன் எதிரொலியாக கனரக தொழில்துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
288 தொகுதிகளை கொண்டுள்ள மகாராஷ்டிரா தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை. ஆனால், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஆனால் அதிக பெரும்பான்மை பெற்ற பாஜவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தபோது ஆட்சியமைக்க போவதில்லை என பாஜக அறிவித்தது. இதனால் பாஜக சிவசேனா கூட்டணி மகாராஷ்டிராவில் முறிந்தது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் தனிப்பெரும்பான்மையை பெற்ற சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே மத்தியில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டால் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையில் பாஜக - சிவசேனா கூட்டணி தற்போது முறிந்துள்ளது. இதன் எதிரொலியாக கனரக தொழில் துறை அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.