SIR சர்ச்சை| தேர்தல் ஆணையத்துக்குள் பிளவு? எதிர்க்கட்சிகள் போர்க்கொடி!
SIR எனப்படும் Special Intensive Revision குறித்து தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளிவந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. . இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது கடுமையான எதிர்ப்புகள் உருவாகியுள்ளது.
செய்தியாளர் - M.மீரா
SIR எனப்படும் Special Intensive Revision தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வெளியான தகவல், அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி, ஆகிய இருவரும் கடந்த 10 மாதங்களில் SIR தொடர்பான முடிவுகள் குறித்து குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களை சேர்ப்பது, வாக்காளர் பெயர்களை நீக்குவது, வாக்காளர் பட்டியல் மென்பொருள் மற்றும் மேல்முறையீடுகள் உள்ளிட்ட விவகாரங்களில் இந்த எதிர்ப்பு இருந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.
குறிப்பாக, புதிய வாக்காளர்கள் பதிவு செய்யும் Form 6-ல் SIR தொடர்பான கூடுதல் விவரங்கள் சேர்க்கப்பட்டதற்கு இரு தேர்தல் ஆணையர்களும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதற்கு விதிகளில் திருத்தம் தேவை என அவர்கள் குறிப்பிட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
மேலும், வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப அமைப்பின் கட்டுப்பாடு டெல்லியில் வைத்திருப்பது குறித்தும் இரு தேர்தல் ஆணையர்களும் கவலை தெரிவித்ததாகவும், இது மாநில அளவிலான அதிகாரிகளின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும் என அவர்கள் குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல்களை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மனீஷ் திவாரி, வெளியான தகவல்கள் உண்மையாக இருந்தால், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து தீவிரமான கேள்விகள் எழுவதாகவும், ஞானேஷ் குமாருக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகரிகா கோஷ் தேர்தல் ஆணையம் ஒரே நபரின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதேநேரத்தில், தேர்தல் ஆணையம் இந்த தகவல்களை மறுத்துள்ளது. ஆணையத்தின் தரப்பில், அனைத்து முடிவுகளிலும் மூன்று தேர்தல் ஆணையர்களின் கையெழுத்தும் இருந்ததாகவும், சந்து மற்றும் ஜோஷி சில கருத்துகளுக்கு எதிர்ப்புகளை தெரிவித்திருந்தாலும், அவற்றை முழுமையான எதிர்ப்பு எனக் கருத முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், SIR நடவடிக்கை தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்குள் உண்மையில் கருத்து வேறுபாடு இருந்ததா என்பது குறித்து தற்போது அரசியல் மற்றும் சட்ட ரீதியாக விவாதம் தீவிரமடைந்துள்ளது.

