
மும்பையை சேர்ந்த பிரபல பாடகரும் பாடலாசிரியருமான லக்கி அலி அண்மையில் தனது சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் 'பிரம்மன்' என்ற வார்த்தை 'ஆபிரகாம்' என்பதிலிருந்து உருவானதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பாடகர் லக்கி அலியின் இந்த பதிவானது, இந்து கடவுளாக சொல்லப்படும் மும்மூர்த்திகளுள் ஒருவரான பிரம்மாவை வணங்குபவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு இந்து அமைப்புகள், ஆன்மீகவாதிகள் லக்கி அலியின் பதிவுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தனது பதிவுக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார் லக்கி அலி. இதுதொடர்பாக அவரது புதிய பதிவில், ''எனது கடைசி பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியாக உணர்கிறேன். யாருக்கும் மனக்கசப்பையோ கோபத்தையோ ஏற்படுத்தும் நோக்கில் அந்த பதிவு வெளியிடப்படவில்லை.
அவ்வாறு ஏற்படுத்தியிருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
எனது நோக்கம் நம் அனைவரையும் நெருக்கமாகக் கொண்டு வர வேண்டும் என்பதுதான். ஆனால் புரிந்துகொள்ளப்பட்டது வேறொன்றாக அமைந்துவிட்டது.
எனது பதிவு பல இந்து சகோதர, சகோதரிகளை வருத்தத்தில் ஆழ்த்தும் என்பதை முன்னரே நான் அறிந்திருந்ததால் மிகக்கவனமாக அதை எழுதியிருப்பேன். என்னுடைய பதிவு வருத்தத்தை ஏற்படுத்தியதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.