இறுதி மூச்சு வரை பாடல்... காலமானார் காதல் பாடல்களுக்கு உயிர் கொடுத்த பாடகர் கே.கே.

இறுதி மூச்சு வரை பாடல்... காலமானார் காதல் பாடல்களுக்கு உயிர் கொடுத்த பாடகர் கே.கே.
இறுதி மூச்சு வரை பாடல்... காலமானார் காதல் பாடல்களுக்கு உயிர் கொடுத்த பாடகர் கே.கே.

பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (எ) கே.கே மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் காலமானார். கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சிக்குப்பின் அறைக்குச் சென்றபோது உயிர்பிரிந்தது. பாடகர் கே.கே. மரணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அவருக்கு வயது 53.

தமிழ் சினிமாவில் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கே.கே. டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்தவர். திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் முன்பே 3,500-க்கும் மேற்பட்ட ஜிங்க்கிள்ஸ் (Jingles) எனப்படும் விளம்பர பாடல்களை பாடியுள்ளார். இவரின் குரல் வளத்தை கண்டறிந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், காதல் தேசம் திரைப்படத்தில் "கல்லூரிச் சாலை" மற்றும் "ஹலோ டாக்டர்" பாடல்களை பாடும் வாய்ப்பை வழங்கினார். இது தான் கே.கே. திரையில் பாடிய முதல் பாடல்களாக கருதப்படுகிறது.

90'S கிட்ஸ்களின் மனம் கவர்ந்த பல பாடல்களுக்கு குரல் கொடுத்தவர் கே.கே! மின்சார கனவு திரைப்படத்தில் 'ஸ்டராபெர்ரி கண்ணே’, உயிரோடு உயிராக திரைப்படத்தில் 'பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்’, செல்லமே திரைப்படத்தில் 'காதலிக்கும் ஆசையில்லை’, காக்க காக்க திரைப்படத்தில் 'உயிரின் உயிரே’, 7ஜி ரெயின்போ காலனியில் 'நினைத்து நினைத்து பார்த்தேன்’, காவலன் திரைப்படத்தில் 'பட்டாம்பூச்சி கூப்பிடும் போது’, மன்மதன் திரைப்படத்தில் 'காதல் வளர்த்தேன்’ உள்ளிட்ட பல்வேறு காதல் பாடல்களுக்கு இவரின் குரலே உயிர் கொடுத்தது. மெல்லிசை காதல் பாடல் மட்டுமின்றி, ரெட் படத்தில் 'ஒல்லிகுச்சி உடம்புகாரி’, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் 'வச்சிக்க வச்சிக்க வா இடுப்புல’, அந்நியன் திரைப்படத்தில் 'அண்டங்காக்கா கொண்டக்காரி’, கில்லி படத்தில் ‘அப்படிப்போடு போடு’ என அதிரடியான காதல் பாடல்களும் கே.கே.வின் தனித்த குரலால் மேலும் அழகானது. இப்படியாக 90'S கிட்ஸ்களின் காதல் பாடல்களுக்கு உயிர் கொடுத்த கே.கே.-வின் குரல் அதிரடி காதல் பாடல்களையும் தனித்த குரலால் அழகாக்கியவர் கே.கே.

மேலும் 1999-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக கே.கே. பாடல் பாடியுள்ளார். மண்ணைவிட்டு மறைந்தாலும், இசை பிரியர்களின் பேவரிட் ஹிட் லிஸ்டில் இடம்பெற்றிருந்த பாடல்களின் வாயிலாக கே.கே. வும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெறுவார். சுவாசிப்பதை போன்று பாடுவதை நேசித்த கே.கே., தனது இறுதி மூச்சு வரை பாடலை பாடியப்படி வாழ்ந்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழாவில் இசை நிகழ்ச்சிக்குப் பிறகு, அறைக்கு சென்ற அவர் மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இவரது மறைவுக்கு டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்து வயதினரையும் கவர்ந்த அவரது பாடல்கள் பல உணர்ச்சிகளை பிரதிபலித்ததாக குறிப்பிட்டுள்ளார். ’என் உயிரின் உயிரே பிரிந்து விட்டதாக உணர்கிறேன்’ என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதே போன்று பல்வேறு தலைவர்களும், திரைபிரபலங்களும் பாடகர் கே. கே.-வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரின் ஏராளமான ரசிகர்கள், சமூக வலைதளத்தில் கே.கே.வின் பாடல்களை பதிவிட்டு, தங்களது சோகத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com