காலிஸ்தான் ஆதரவாளருடன் புகைப்படம்: சர்ச்சையில் மீண்டும் சித்து!
காலிஸ்தான் ஆதரவு தலைவருடன் பஞ்சாப் அமைச்சர் சித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக்கின் சமாதி பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் உள்ளது. அங்கிருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேரா பாபா நானக் கோயிலுக்கு சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்வது வழக்கம். அவர்கள் செல்வதற்காக இந்தியா-பாகிஸ்தான் பகுதிகளில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் நேற்று நடந்தது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அடிக்கல் நாட்டினார். இந்தியா சார்பில் மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கவுர் பாதல், ஹர்தீப் சிங் புரி மற்றும் பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத்சிங் சித்து பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராட்டிப் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கோபால் சிங் சாவ்லாவுடன், சித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படத்தை சாவ்லா தனது முகநூலில் பகிர்ந்துள்ளார். இந்த விவகாரம், சித்துவுக்கு எதிராக மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதை விமர்சித்துள்ள மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ”பாகிஸ்தான் மண்ணில் இதுபோன்ற தீய தந்திரங்களுடன் செயல்படுவதை ஒதுக்கிவிட முடியாது” என்று தெரிவித்துள்ளார். இது போன்ற சந்திப்புகளில் இருந்து சித்து விலகியிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.