'சித்து விளையாட்டு, பட்டியலின வாக்கு வங்கி' - பஞ்சாப் முதல்வர் காங். மாற்றியதன் பின்புலம்!

'சித்து விளையாட்டு, பட்டியலின வாக்கு வங்கி' - பஞ்சாப் முதல்வர் காங். மாற்றியதன் பின்புலம்!
'சித்து விளையாட்டு, பட்டியலின வாக்கு வங்கி' - பஞ்சாப் முதல்வர் காங். மாற்றியதன் பின்புலம்!

பஞ்சாப் மாநிலத்துக்கு இன்னும் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அந்த மாநில முதல்வரை மாற்ற காரணம் என்ன? அந்தப் பதவிக்கு எதிர்பாராத வகையில் சரண்ஜித் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஏன்? பஞ்சாப் அரசியலில் என்னதான் நடக்கிறது? - காங்கிரஸ் கட்சி தலைமையின் முடிவுகளின் பின்னணி குறித்து விரிவாகப் பார்ப்போம்.

காங்கிரஸ் கட்சியின் முதல்வராக பஞ்சாப் மாநிலத்தை ஒன்பதரை வருடங்கள் ஆட்சி செய்தவர் அமரீந்தர் சிங். பஞ்சாப் அரசியல் வட்டாரங்களில் கேப்டன் என்று அழைக்கப்படும் இவர், தன்னிச்சையாக செயல்படும் தன்மை கொண்டவர் என்பதால், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையான சோனியா காந்தி குடும்பத்துடன், குறிப்பாக ராகுல் காந்தியுடன் நட்புறவு இருந்ததில்லை.

2017-ஆம் வருட சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது மற்றும் வியூகம் வகுப்பது போன்ற விஷயங்களில் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என அவர் வற்புறுத்தியது குறிப்பிடத்தக்கது. பிரச்னைகள் ஏற்பட்டாலும், அம்ரீந்தர் சிங் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானதால், காந்தி குடும்பம் அவரை பஞ்சாப் மாநில விவகாரங்களை சுதந்திரமாக கையாள அனுமதித்தது.

மக்கள் அதிருப்தி: கடந்த வருட கொரோனா பாதிப்பு காரணமாக பஞ்சாப் மாநில பொதுமக்கள் அம்ரீந்தர் அரசு மீது அதிருப்தியுடன் உள்ளார்கள் என பல காங்கிரஸ் தலைவர்கள் சமீப காலங்களாக புகார் அளித்து வந்தனர். இந்தப் புகார்களின் பின்னணியில் இருந்த
முக்கியப் புள்ளி பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் நெருக்கமாக பழகி வரும் சித்து, காங்கிரஸ் கட்சி அம்ரீந்தர் சிங் தலைமையில் செயல்பட்டால் அடுத்த வருட சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என அவர்களிடம் தொடர்ந்து தெரிவித்து வந்தார். பஞ்சாப் மாநில காங்கிரஸுக்கு தான் தலைமையேற்று கட்சிக்கு வெற்றி பெற்றுத் தருவேன் என அவர்களிடம் சித்து உறுதியளித்ததன் விளைவாக, அவர் சமீபத்திலே பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சித்து விளையாட்டு: அடுத்த வருட சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்துக்கு பொறுப்பாக தன்னை நியமிக்க வேண்டும் என்றும், வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் அமரீந்தர் சிங் தலையிடக் கூடாது எனவும் சித்து அடுத்தகட்ட காய்நகர்த்தலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் நிலையை வர்ணிக்கின்றனர்.

இந்நிலையில், சித்துவுக்குதான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை ஆதரவு என்பதும், அம்ரீந்தர் சிங்குக்கு ஆதரவு கிடையாது என்பது தெளிவானதும் முதல்வருக்கு எதிராக பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கி, சித்து ஆதரவாளர்களாக உருவெடுத்தனர்.
பாட்டியாலா மகாராஜா குடும்பத்தை சேர்ந்த அம்ரீந்தர் பொதுமக்களை சந்திப்பதில்லை என்றும், 80 வயதாகும் அவரால் இனி இளைய தலைமுறைபோல் வேகமாக செயல்பட முடியாது என்றும் சித்து கோஷ்டி குற்றம்சாட்டியது.

மக்களின் அதிருப்தி தோல்வியை அளிக்காமல் இருக்க புதுமுகங்களை கொண்டுவர வேண்டும் என காங்கிரஸ் தலைமை முடிவெடுத்தது. இதேபோன்ற நடவடிக்கையை பாரதிய ஜனதா கட்சி குஜராத், உத்தராகண்ட் மற்றும் கர்நாடக மாநிலங்களில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அம்ரீந்தர் அதிருப்தி: கட்சித் தலைமையின் முடிவுகளால் கடும் கோபமடைந்த அம்ரீந்தர் சிங் சனிக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் என தெரிந்தவுடன் தனது ராஜினாமாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் சமர்ப்பித்தார்.
சித்துதான் முதல்வர் பதவி பறிபோக காரணம் எனவும், கட்சியின் தலைமை தன்னை அவமதித்துவிட்டதாகவும் அதிருப்தியுடன் குற்றம்சாட்டினார் அமரீந்தர் சிங்.

காந்தி குடும்பத்தின் கைப்பாவையாக செயல்பட அம்ரீந்தர் சிங் தயாரில்லை என்பதுதான் அவர் ஓரம்கட்டப்பட முக்கியக் காரணம் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

தொடரும் பூசல்: கடும் உட்கட்சி பூசல் காரணமாக, அம்ரீந்தர் சிங்குக்கு பிறகு யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்விக்கு விடை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. சித்து முதல்வராக நியமிக்கப்பட்டால் நிச்சயம் அவருக்கு எதிராக அம்ரீந்தர் சிங் ஆதரவாளர்கள் செயல்படுவார்கள் என்றும், இது காங்கிரஸ் அரசு கவிழ காரணமாக இருந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாக அவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைமை தயக்கம் காட்டி வருகிறது. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான காந்தி குடும்பத்துக்கு நெருக்கமான அம்பிகா சோனி அந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அம்ரீந்தர் சிங் ஆதரவு தொடரும் வகையிலே சித்து கோஷ்டியை சேர்ந்த சுக்ஜிந்தர் சிங் ரன்தாவா முதல்வராக நியமிக்கப்பட்டால் சரியாக இருக்கும் என காங்கிரஸ் கட்சியின் பல சட்டப்பேரவை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், ரந்தாவா முதல்வராக கூடாது என சித்து மறுத்துவிட்டார். தனக்கு போட்டியாக ரன்தவா உருவாகிவிடுவார் என சித்து எதிர்த்ததாக அமரீந்தர் சிங் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்டியலின வாக்கு வங்கி: காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை எதிர்பாராத வகையிலே சரண்ஜித் சிங் முதல்வராக நியமிக்கப்பட வேண்டும் என முடிவு செய்தது. பட்டியலினத் தலைவரான இவரை அம்ரீந்தர் சிங் எதிர்க்க மாட்டார் என காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை கருதுகிறது. அதேசமயத்தில் பஞ்சாப் மாநிலத்தில் 30%-க்கும் மேல் வாக்கு வங்கி உள்ள பட்டியலின சமூகத்தினரை கவர்ந்து இழுக்கலாம் எனவும் கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள். ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சி அடுத்த வருட தேர்தலில் பட்டியலின மக்களை தன்பால் கவர்ந்து இழுக்க பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

ஒருபுறம் சீக்கியரான அம்ரீந்தர் சிங் தனக்கு அவமரியாதை ஏற்பட்டதாக கூறியது, கட்சிக்கு எதிராக செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்கும் இந்த நியமனம் உதவிகரமாக இருக்கும் என சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கருதுகிறார்கள். அரசியல் வியூகப்படி இந்த முடிவு மிகவும் கச்சிதமானது என கருதப்பட்டாலும், காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் இன்னும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இடைக்கால முதல்வரா? - காங்கிரஸ் கட்சி அடுத்த வருட சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றால், அடுத்த முதல்வராக சித்து நியமிக்கப்படுவார் என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். சித்து கட்சின் தேர்தல் பிரசாரத்தில் முதன்மையாக இருப்பார் என கட்சியின் பஞ்சாப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் தெரிவித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் ஜாக்கர் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பட்டியலின தலைவர் ஒருவரை முதல்வராக காங்கிரஸ் நியமித்துள்ள அரசியல் தாக்கத்தையே அவர் தற்காலிகமாகத்தான் அந்தப் பதவியில் நியமிக்கப்படுகிறார் என்கிற கருத்து கெடுத்துவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இடைக்காலமாகத்தான் ஒரு பட்டியலினத் தலைவரை காங்கிரஸ் நியமித்துள்ளது என்றும், இது உட்கட்சிப் பூசலால் பாதிக்கப்படாமல் தப்ப மட்டுமே எனவும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், புதிய முதல்வர் காந்தி குடும்பம் மற்றும் சித்து ஆகியோரின் கைப்பாவையாக செயல்படுவாரா அல்லது பட்டியலின மக்களின் பிரதிநிதியாக வெற்றிகரமாக காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை பெருக்குவாரா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும். அதே நேரத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் அடுத்த முதல்வர் பதவி தனக்கு கிடைக்காது என தெரியவந்தால், சித்து கட்சிக்கு எதிராக செயல்பட தயங்கமாட்டார் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள்.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com