சித்தராமையா முதல் கனிமொழி வரை... அமித்ஷா கருத்துக்கு எதிராக இணைந்த மாநில மொழிக்குரல்கள்!

சித்தராமையா முதல் கனிமொழி வரை... அமித்ஷா கருத்துக்கு எதிராக இணைந்த மாநில மொழிக்குரல்கள்!
சித்தராமையா முதல் கனிமொழி வரை... அமித்ஷா கருத்துக்கு எதிராக இணைந்த மாநில மொழிக்குரல்கள்!

(கோப்பு புகைப்படம்)

`இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல’ என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக நாடாளுமன்ற அலுவல் மொழி குழு கூட்டத்தில் உரையாற்றிய அமித்ஷா, "அரசை நடத்துவதற்கான அலுவல் மொழியாக இந்தியை பயன்படுத்த பிரதமர் முடிவு செய்துள்ளளார். இதன் மூலம் அம்மொழியின் முக்கியத்துவம் கூடும். அமைச்சரவையின் செயல்பாடுகள் 70% இந்தி மொழியிலேயே இருக்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கான மொழியாக இந்தியை பயன்படுத்துவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. வெவ்வேறு மாநிலத்தவர்கள் தங்களுக்குள் பேசும்போது, பயன்படுத்தும் மொழி இந்த நாட்டின் மொழியாக இருக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எம்.பி. சு.வெங்கடேசன் " `அரியணையில் யார் உட்காருவது... ஆங்கிலமா, இந்தியா’ என்றால், எங்கள் பதில் எட்டாவது அட்டவணையின் 22 மொழிகளுமே. ஹிந்தியைத் தவிர மற்ற மொழிகளை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுப்பதும், ஆங்கிலத்தை அகற்றுவதுமே மத்திய அரசின் தந்திரம். தந்திரங்களை தாய்மொழி கொண்டு மக்கள் வெல்வார்கள்” என்று கூறியிருந்தார்.

இதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், "பாஜக-வின் இந்தி திணிப்பிற்கு எதிராக கடும் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை உருவாகும். அமித்ஷா ஆற்றிய உரை இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு விரோதமானதாகும். இந்தியாவின் ஒற்றுமைக்கு உலை வைக்கிற செயலாகும்” என்று கூறியுள்ளார்.

இதேபோல எம்.பி. திருமாவளவனும் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், `இந்தி குறித்த அமித்ஷா பேச்சு, நாட்டின் பன்மைத்துவத்துக்கு எதிரானது; வன்மையாக இதை கண்டிக்கிறோம். பல்வேறு வகைகளிலிருந்து மொழியை திணிக்க பாஜக தலைமையிலான அரசு முயல்கிறது” என்று கூறினார்.

திமுக எம்.பி. கனிமொழி இதுகுறித்து பதிவில், "இணைப்பு மொழி என்று ஒன்றைத் திணிப்பது நாட்டை இணைக்கப் பயன்படாது அது பிரிக்கத்தான் பயன்படும். ஒன்றிய அரசும் அமைச்சர்களும் இந்தி எதிர்ப்பின் வரலாற்றை, தியாகங்களைத் தெரிந்து கொள்ளவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

போலவே கர்நாடகத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் தற்போது எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா பதிவிட்டிருக்கும் ட்வீட்டில் “இந்தி இந்தியாவின் தேசிய மொழியல்ல. இந்தியை தேசிய மொழியாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அரசியல் லாபத்துக்காக தனது தாய் மொழியான குஜராத்தியை புறக்கணித்து இந்தியை ஆதரித்து சொந்த மாநிலத்துக்கு அமித்ஷா துரோகம் செய்கிறார். காந்தி பிறந்த மாநிலத்தை சேர்ந்த அமித்ஷா பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இந்தியை பயன்படுத்தி உதவி செய்த சாவர்க்கர்போல் நடந்து கொள்கிறார். இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியை திணிக்கும் முயற்சி ஒருபோதும் வெற்றி பெற்றது இல்லை. இந்தியை திணிப்பதன் மூலம் பன்முகத்தன்மையை சீர்குலைக்க பாஜக முயன்றால் கடும் எதிர்விளைவுகள் ஏற்படும்'' என கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.

அதேநேரம் தமிழகத்தில் பாஜக-வுடன் கூட்டணி கட்சியிலுள்ள அதிமுக-வின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இந்தக் கருத்து குறித்து பேசுகையில், ``அமித்ஷாவின் இந்தி பேச்சு பற்றி தகவல் தெரியவில்லை. ஆகவே இப்போது அதுகுறித்து கருத்து தெரிவிக்க இயலாது” என்று மட்டும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com