நொடி நேரம் தாமதிக்காத எஸ்.ஐ நேரு... திருச்சி கொள்ளையனை பிடித்தது எப்படி..?

நொடி நேரம் தாமதிக்காத எஸ்.ஐ நேரு... திருச்சி கொள்ளையனை பிடித்தது எப்படி..?
நொடி நேரம் தாமதிக்காத எஸ்.ஐ நேரு... திருச்சி கொள்ளையனை பிடித்தது எப்படி..?

திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளையனை சுமார் 1.5 கி.மீ தூரம் தூரத்திச் சென்று பிடித்த உதவி ஆய்வாளர் பாரத நேருவிற்கு (31) பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருச்சி நகை கடையில் பின்பக்க சுவரை துளையிட்டு, 28 கிலோ எடையுள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. திருச்சியை சுற்றியுள்ள பெரம்பலூர்‌, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேடுதல்‌ வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. பிரதான சாலைகளில் கிடுக்கிப்பிடி சோதனை நடைபெற்றது. இதற்கு கைமேல் பலன் கிடைத்தது.

(கைது செய்யப்பட்ட மணிகண்டன்)

நேற்று முன்தினம் இரவு சுமார் எட்டரை மணியளவில் பெரிய திருப்பம் கிடைத்தது. திருவாரூரில் விளமல் என்ற இடத்தில்‌ காவல்துறையினர் வாகன சோதனையில்‌ ஈடுபட்டபோது, அந்த வழியே பைக்கில் வந்த இருவர் வண்டியை நிறுத்தாமல் வேகமாக ஓட்டியுள்ளனர். சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்ற காவல்துறையினர், மடப்புரம்‌ கமலாம்பாள் நகரில் அவர்களை மடக்கினர். அப்போது வாகனத்தில் பின்னால் இருந்த சுரேஷ் என்பவன் தப்பியோடிவிட்டான். வாகனத்தை ஓட்டிய மணிகண்டன் மட்டும் மாட்டிக்கொண்டான்.

மணிகண்டன் வைத்திருந்‌த பெட்டியில் 5 கிலோ தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றில் இருந்த பார் கோடு சீட்டுகளை சோதித்ததில் அவை திருச்சி நகைகடையிலிருந்து திருடப்பட்டவை என்பது உறுதியானது. மணிகண்‌டனுடன் சேர்ந்து சென்றபோது, தப்பியோடிய சுரேஷ், இந்தியா முழுவதும் வங்கிகள், ஏடிஎம் மையங்களில் நடத்தப்பட்ட பல்வேறு கொள்ளைகளில் தொடர்புடைய திருவாரூரைச் சேர்ந்த முருகன் என்பவனின் உறவினர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனால் கொள்ளைக் கும்பலின் தலைவனான திருவாரூர் முருகன் ‌மற்றும் அவரது கூட்டாளிகளான சுரேஷ், கோபால், காளிதாஸ், தினகரன், லோகநாதன் மற்றும் ரகு ஆகியோரை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மணிகண்டனை போலீசார் தக்க நேரத்தில் கைது செய்ததே இந்த வழக்கில் துப்பு துலங்க முக்கிய காரணம். அப்படியிருக்க, கொள்ளையன் மணிகண்டனை உதவி ஆய்வாளர் அவ்வளவு எளிதில் ஒன்றும் கைது செய்யவில்லை. சுமார் 1.5 கி.மீ தூரம் தூரத்திச் சென்றே மணிகண்டனை, உதவி ஆய்வாளர் கைது செய்துள்ளார். 

நடந்தது என்ன..?

(மணிகண்டனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள்)

வழக்கம்போல வியாழக்கிழமை இரவு உதவி ஆய்வாளர் பாரத நேரு, தலைமைக் காவலர் ரவி உள்ளிட்டோர் விளமல் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் அவ்வழியாக, இருவருடன் வந்த ஒரு இருசக்கர வாகனத்தை அவர்கள் மறித்துள்ளனர். ஆனால் அந்த நபர்கள் போலீசாரிடம் சிக்காமல் வேகமாக வண்டியை எடுத்திருக்கின்றனர். நொடி நேரம் கூட தாமதிக்காத உதவி ஆய்வாளர் கொள்ளையர்களை தூரத்திச் சென்றுள்ளார். ஆனால் கொள்ளையர்கள் மிக குறுகலான சந்து வழியாக பைக்கை ஓட்டி எப்படியாவது போலீசாருக்கு டிமிக்கி கொடுக்கலாம் என நினைத்திருக்கிறார்கள். ஆனால் தனது விடா முயற்சியால் சுமார் 1.5 கி.மீ தூரத்திற்கு துரத்திச் சென்று, பின்பு கொள்ளையன் மணிகண்டனை வழிமறித்து உதவி ஆய்வாளார் பிடித்துள்ளார். அதேநேரத்தில் கொள்ளையன் மணிகண்டனின் பைக்கில் பின்னால் இருந்த மற்றொரு கொள்ளையனான சுரேஷ் தப்பி ஓடிவிட்டார். அவரையும் பாரத நேரு ஓடி பிடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் சுரேஷ் தப்பிவிட்டார். உதவி ஆய்வாளரின் துரித செயல்பாடுதான் தமிழகத்தையே உலுக்கிய கொள்ளை சம்பவத்தின் குற்றவாளியை பிடிக்க ஒரு சாவி போல அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com