வாடிக்கையாளர் விவரங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது - டிராய் தலைவர்
வாடிக்கையாளர்களின் விவரங்களை பெறும் செல்போன் செயலி நிறுவனங்கள் அவ்விவரங்களை தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும் என டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசின் திட்டங்களை பெற ஆதார் அவசியம் என்றும் அரசியல் சாசனப்படி ஆதார் செல்லும் என உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26ம் தேதி அதிரடியான தீர்ப்பை வழங்கியது. அத்தோடு, எந்தெந்த விவகாரங்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் அவசியம் இல்லை என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டது. அதில் மொபைல் எண்கள் பெறுவதற்கு, சிபிஎஸ்இ, நீட் போன்ற எந்த ஒரு தேர்வுகளுக்கும், பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் அட்டை அவசியம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இந்நிலையில் சிம் கார்டு நிறுவனம் ஆதார் எண் வாங்குவதை நிறுத்துவதற்கான திட்டம் குறித்து பதில் அளிக்குமாறு தொலைத் தொடர்பு நிறுவனங்களை ஆதார் ஆணையம் (UIDAI) கேட்டுக்கொண்டது.
இதனைதொடர்ந்து ஆதார் அட்டை அடிப்படையில் வழங்கப்பட்ட மொபைல் இணைப்புகளுக்கு எந்த ஒரு நிபந்தனையும் இன்றி நுகர்வோரின் ஒப்புதலுடன் மட்டுமே தகவல்களை பெற வேண்டும் என தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர்கள் தவிர புதிதாக சிம் வாங்குபவர்களிடமும் கை ரேகையை பெற்று அவரது ஆதார் விவரங்களை சரிபார்க்க கூடாது என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதே போல ஸ்மார்ட்போன்களில் செயலிகளை பதிவிறக்கம் செய்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று டிராய் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான டிராய், தொலைத்தொடர்பு துறையில் ஏற்கெனவே உள்ள தனி நபர் தகவல் பாதுகாப்பு விதிகள் போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளது. செயலிகளை பதிவிறக்கம் செய்யும்போது அவை கேட்கும் அனுமதிகளை நன்கு படித்து பார்த்து புரிந்துகொண்டே பின்பே ஒப்புதல் தர வேண்டும் என்றும் டிராய் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். செயலிகளை பதிவிறக்கும்போது அதில் கேட்கப்படும் அனுமதிகளுக்கு கண்மூடித்தனமாக ஒப்புதல் அளித்தால் பின்னால் சிக்கல்களை சந்திக்க வாய்ப்பு உண்டு என்றும் டிராய் தலைவர் தெரிவித்தார்.
மேலும் தனி நபரின் விவரங்களை பெறும் நிறுவனங்களுக்கு அதில் உரிமை இல்லை என்றும், நுகர்வோரின் ஒப்புதலுடன் மட்டுமே தகவல்களை பெற வேண்டும் எனவும் டிராய் அறிவுறுத்தியுள்ளது. மேலும் நுகர்வோரின் ஒப்புதலுடன் தகவல்கள் பெறப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என தொலைத்தொடர்பு துறைக்கு டிராய் பரிந்துரையும் செய்துள்ளது.