“இந்திய விமானத்தை நாமே சுட்டது மிகப் பெரிய தவறு” - தளபதி பதவ்ரியா
இந்திய விமானப்படையின் விமானத்தை நமது விமானப்படையினரே சுட்டது மிகப் பெரிய தவறு என்று இந்திய விமானப்படையின் தளபதி ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் சார்பில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடத்தப்பட்டது. இதில் விமானப்படையின் தளபதி ராகேஷ் குமார் சிங் பதவ்ரியா கலந்து கொண்டார். அவர் இந்தச் சந்திப்பில் இந்திய விமானப்படையின் சாதனைகள் குறித்து விளக்கினார்.
அப்போது பேசிய அவர், “இந்திய விமானப்படை எந்தவிதமான நடவடிக்கைக்கும் எப்போதும் தயாரான நிலையில்தான் உள்ளது. இந்தாண்டும் இந்திய விமானப்படை பாலகோட் தாக்குதலை சிறப்பாக நடத்தியது. இந்தத் தாக்குதலில் இந்தியாவின் மிக்-21 ரக விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானது. அதேபோல பாகிஸ்தான் தனது எஃப்-16ரக விமானத்தை இழந்தது.
பாலகோட் தாக்குதலுக்கு அடுத்த நாளான பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய விமானப்படையின் எம்.ஐ-17ரக விமானம் ஜம்மு- காஷ்மீர் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனை இந்திய விமானப்படையினர் தான் சுட்டு வீழ்த்தினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது நாங்கள் செய்த மிகப் பெரிய தவறு. இந்தச் சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தனது அறிக்கையை எங்களிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு முறை நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இந்த விசாரணை அறிக்கையின் மூலம் அப்போது நடைபெற்ற சில தவறுகளும் கண்டறியப்பட்டுள்ளன. அத்துடன் சில நடைமுறைகள் தவறாக கடைப்பிடிக்கப் பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எம்.ஐ-17 ரக விமானத்தில் பயணம் செய்திருந்த 6 விமானப்படையின் வீரர்களும் உயிரிழிந்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு முன்பு பாலகோட் தாக்குதல் தொடர்பான விளக்கம் ஒரு குறும்படம் மூலம் விமானப்படையினால் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.