மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரமாகியும், ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக, சிவசேனா இடையே இழுபறி நீடித்து வருகிறது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா - சிவசேனா ஒரு கூட்டணியாகவும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. இதில் பாரதிய ஜனதா 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றின. காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றி கண்டன. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற சூழலில் 161 இடங்களை வென்றுள்ள பாரதிய ஜனதா - சிவசேனா கூட்டணி எளிதில் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அந்தக்கூட்டணி ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தேர்தலில் வென்றால் முதலமைச்சர் பதவியை தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது, அமைச்சரவையில் சமபங்கு என்று முன்பே பேசி ஒப்புக்கொள்ளப்பட்டதாக சிவசேனா தரப்பு கூறுகிறது. பேசிக்கொண்டபடி, முதலமைச்சர் பதவியை முதலில் தங்கள் கட்சிக்கு வழங்க வேண்டும் என்றும் சிவசேனா பிடிவாதம் பிடிக்கின்றது. ஆனால் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்வது பற்றி ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்று தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறி வருகிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு முதலமைச்சர் பதவி தங்களுக்குத்தான் என்பதில் பாரதிய ஜனதாவும் உறுதியாக உள்ளது.
ஆட்சி அமைப்பதில் பாஜக சிவசேனா இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில் திடீர் திருப்பமாக சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே போன் மூலம் சரத் பவாருடன் பேசியதாகக் கூறப்படுகிறது.
சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரும் நிலையில், தேசியவாத காங்கிரஸும், காங்கிரஸும் வெளியே இருந்து ஆதரவு அளிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அடுத்தவாரம் டெல்லி செல்லும் சரத் பவார் இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனிடையே மகாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளனர்.
இதனிடையே தற்போதைய பாஜகவின் ஆட்சிக்காலம் நவம்பர் 8 ஆம் தேதிக்குள் முடிவடைகிறது. நவம்பர் 7 ஆம் தேதிக்குள் புதிய ஆட்சி அமையாவிட்டால், குடியரசுத் தலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், தீபாவளி விடுமுறையால் சிவசேனா பாஜக இடையே பேச்சுவார்த்தை தாமதமாகியுள்ளதாகவும், ஒருசில நாளில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி அமையுமா அல்லது தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமையுமா என்ற கேள்விக்கு நவம்பர் 7 ஆம் தேதிக்குள் முடிவு கிடைத்துவிடும்.