மத்தியப் பிரதேச பாஜகவை கலங்கடிக்கும் 'மது'... - சிவராஜ் சிங் சவுகான் Vs உமா பாரதி!

மத்தியப் பிரதேச பாஜகவை கலங்கடிக்கும் 'மது'... - சிவராஜ் சிங் சவுகான் Vs உமா பாரதி!

மத்தியப் பிரதேச பாஜகவை கலங்கடிக்கும் 'மது'... - சிவராஜ் சிங் சவுகான் Vs உமா பாரதி!

மத்தியப் பிரதேசத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் உமாபாரதி தீயைப் பற்றவைத்துள்ளார். இதையடுத்து, மார்ச் மாதம் முதல் மதுவுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுக்கப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். உமா பாரதியின் இந்த அறிவிப்புக்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை அதிகாரபூர்வமாக தெளிவுபடுத்தவில்லை. உமாபாரதியின் இந்த முழக்கம், மாநில பாஜகவுக்குள் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஏற்கெனவே அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மாநிலத்தில் முழுமையான போதைப்பொருள் தடுப்பு குறித்து முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். இந்நிலையில், உமா பாரதியின் அறிவிப்பு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜனவரி 11-ம் தேதி மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவில் நடந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். தனது அரசியல் மறுபிரவேசம் குறித்து சரியான தருணத்தை எதிர்நோக்கியிருந்த உமா பாரதி, இந்த நிகழ்வை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். அன்று முதல் தீவிர மது எதிர்ப்பு முழக்கத்தை முன்வைக்க தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் மது விற்பனைக்கு தடை கோரி பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் அவர் கடிதம் எழுதினார். ஆனால், உமா பாரதியின் கோரிக்கைக்கு நட்டா செவிசாய்க்கவில்லை. இருந்தாலும், உமா பாரதியின் 'மதுபானத்தை தடை செய்ய வேண்டும்' என்ற முன்னெடுப்பு, முதல்வர் சவுகானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதன்காரணமாக அவரும் வேறு வழியின்று 'மது இல்லா மாநிலம்' என்ற முழக்கத்தை முன்வைக்க தொடங்கியுள்ளார். மத்திய பிரதேசத்தின் கத்னி எனும் பகுதியில் அரசுத் திட்டங்கள் துவக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் சிவராஜ் சிங், "நாங்கள் மத்தியப் பிரதேசத்தை மதுபானம் இல்லாத மாநிலமாக மாற்ற விரும்புகிறோம். பூரண மதுவிலக்கு கொள்கையால் மட்டுமே இது சாத்தியமல்ல. மாறாக, மதுப் பிரியர்கள் இதற்கு ஆதரவு அளித்தால் மட்டுமே பூரண மதுவிலக்கு சாத்தியம். போதைப்பொருள் எதிர்ப்பு பிரசாரத்தை நாங்கள் நடத்த உள்ளோம். போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்துவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்கவேண்டும்" என்றார்.

பூரண மதுவிலக்கு என்பதற்கு பதிலாக போதைப்பொருள் எதிர்ப்பு பிரசாரத்தை மாநிலம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார் சவுகான். இந்தப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நர்மதா ஆற்றுக்கு அருகே 5 கி.மீ சுற்றளவில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனிடையே, அம்மாநிலத்தின் வணிக வரித்துறை புதிய கலால் வரி கொள்கையின் அடிப்படையில் மாநிலத்தின் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை அறிமுகப்படுத்தவும் ஆன்லைன் மூலம் கடைகள் பதிவு செய்யும் முறையும் கொண்டுவர ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போதைய உமா பாரதியின் இந்த மது எதிர்ப்பு பிரசாரத்திற்கு அம்மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவர் அருண் யாதவ் மற்றும் முன்னாள் அமைச்சர் பி.சி.சர்மா ஆதரவு தெரிவித்திருந்தது முதல்வர் சிவராஜ் சிங்கிற்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தை பொறுத்தவரை, அது 5 மாநில எல்லைகளால் சூழப்பட்டுள்ள மாநிலம். மிக நீண்ட, நுண்ணிய எல்லைகளைக் கொண்டு ஒரு மாநிலத்துக்குள் வெளியிலிருந்து மதுபானம் நுழைவதை தடுப்பது என்பது மிகவும் கடினமான காரியம். அதன் எல்லைகளில் ஒன்றான குஜராத்துக்கான மது தேவை என்பது மத்தியப் பிரதேசத்திடமிருந்துதான் பூர்த்தி செய்யப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் விறக்கப்படும் விலையை விட இங்கு கூடுதல் விலையில் மதுபானம் விற்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தில் 2010-ஆம் ஆண்டில், மொத்த மதுபான விற்பனை கடைகளின் எண்ணிக்கை 2,770 ஆக இருந்தது. அதுவே, 2020-ஆம் ஆண்டு 3,605 ஆக உயர்ந்துள்ளது.

எவ்வாறாயினும், மது மீதான பாசாங்குத்தனம் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் அரசியல் விளையாட்டாகவே பார்க்கப்படுகிறது. காரணம், தற்போது ஆன்லைன் மதுபான விநியோக முறையை எதிர்த்து வரும் காங்கிரஸ், கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது இதே திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவெடுத்திருந்தது. அப்போது அதை பாஜக எதிர்த்து அரசியல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com