''கர்நாடக பிரச்னைக்கு காங்கிரஸே காரணம்'': சிவ்ராஜ் சிங் சவுஹான்
கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்துக்கு காங்கிரஸ் தான் காரணம் என மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவையில் குமாரசாமி அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் இருமுறை கெடு விதித்தும், அதை ஆளும் மதசார்பற்ற ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு புறக்கணித்து விட்டது. இதனால், அம்மாநிலத்தில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் சிவ்ராஜ் சிங் சவுஹான், கர்நாடகாவில் தற்போது ஏற்பட்டுள்ள பரிதாபகரமான அரசியல் சூழலுக்கு காங்கிரஸே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார்.
அரசமைப்பு சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பதவியில் அமர்ந்திருக்கும் சபாநாயகர் ரமேஷ்குமார், அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்தார். கர்நாடக அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதால், பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதே நியாயமான நடவடிக்கை எனவும் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.