ஆட்சியமைப்பது குறித்த பாஜகவின் விருப்பத்தை ஆளுநர் கேட்டதற்கு சிவசேனா வரவேற்பு
மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது குறித்து பாஜகவின் விருப்பத்தை ஆளுநர் கேட்டுள்ளதற்கு சிவசேனா கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு, தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர பேரவையில், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றின. தேர்தலுக்கு முன்பே பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. ஆகவே யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு நிலவி வருகிறது.
ஆட்சியமைப்பது குறித்த நடவடிக்கைகளை ஆளுநராவது தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சி தருவதாக சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத் தெரிவி்த்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்புள்ள நிலையில் சிவசேனா கட்சி எம்எல்ஏக்கள் சொகுசு விடுதி ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் மாநிலத்தின் அரசியல் சூழல் குறித்து விவாதிக்க தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு கவிழும் பட்சத்தில் மாற்று அரசுக்கு ஆதரவளிப்பது குறித்து பரிசீலி்ப்போம் என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.