டெல்லி போடும் மாஸ்டர் ப்ளான்.. பாஜகவுடன் இணக்கமாகும் சரத் பவார்!
நாடாளுமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுதற்கு வசதியாக மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெருக்க, அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவும் அவ்வரிசையில் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே, ஒவ்வொரு மாநிலத்திலும் 50% மக்களவைத் தொகுதிகளை சீராக அதிகரிக்கும்பட்சத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்ப்பதற்கு பெரிய காரணங்கள் எதுவும் இருக்காது எனக் கூறியுள்ளார்.
சுப்ரியா சுலேவின் இக்கருத்து அவரது கட்சி பாஜகவை நெருங்குகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும் அவரது கட்சியின் ஜெயந்த் பாட்டீலும் மஹாராஷ்டிர முதல்வரைச் சந்தித்ததும் இந்த ஊகத்தை வலுப்படுத்தியுள்ளது. எனினும், இது சாதாரண அலுவல் சார்ந்த சந்திப்புதான் என ஜெயந்த் பாட்டீல் கூறிவிட்டார். தொகுதி மறுவரை மசோதா குறித்த நிலைப்பாடு i-n-d-i-a கூட்டணி கூட்டத்தில்தான் எடுக்கப்படும் என்றும் சுப்ரியா சுலே விளக்கம் அளித்துவிட்டார். முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் பிரிவையும் திமுகவையும் தங்கள் பக்கம் திருப்ப பாஜக முயல்வதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியிருந்தார். இதற்கிடையே சமீபகாலமாக நடைபெறும் நிகழ்வுகளால் டெல்லியின் கணக்குகள் மாறுகிறதா... பாஜகவுடன் தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் பிரிவு இணக்கமாகிறதா என்ற கேள்வியை வலுப்படுத்தியுள்ளது.

