தேசியவாத காங்கிரஸ் பிளவு: “இதற்கான பெருமையை பிரதமர் மோடிக்கு வழங்க விரும்புகிறேன்” - சரத் பவார்!

தனது கட்சி பிரிந்தது மக்களின் பிரச்னை என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
அஜித் பவார், சரத் பவார், மோடி
அஜித் பவார், சரத் பவார், மோடிtwitter

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் உடனான மோதலால், அக்கட்சியிலிருந்து வெளியேறிய அஜித் பவார், இன்று (ஜூலை 2) அம்மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்வராகப் பதவியேற்றார். மேலும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 29 பேரில் 8 பேருக்கு அமைச்சர் பதவியையும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஏற்கெனவே, சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டே முதல்வராகி, ஒன்றரை வருடமாக ஆட்சி நடத்தி வரும் நிலையில், அஜித் பவாரும் தேசியவாத காங்கிரஸை உடைத்திருப்பது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆளும் அரசில் இணைந்தது குறித்து அஜித் பவார், “பெரும்பான்மையான எம்.எல்.ஏக்களின் ஆதரவு எங்களுக்கு உள்ளது. நாட்டை பிரதமர் மோடி முன்னெடுத்துச் செல்கிறார். அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த முடிவை எடுத்துள்ளேன். எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமை இல்லை. அவர்களுக்குள்ளேயே மோதல் உள்ளது.

அக்கட்சிகள் பேசிக்கொண்டு மட்டுமே உள்ளன. அக்கட்சிகள், நாட்டின் வளர்ச்சிக்கு எந்தப் பங்களிப்பும் செய்யவில்லை. சிவசேனாவுடன் இணைந்து செயல்படும்போது பாஜகவுடன் ஏன் இணைந்து செயல்பட முடியாது? கட்சியின் சின்னம் மற்றும் பெயரைப் பயன்படுத்துவோம். அதன் பெயரிலேயே தேர்தலில் போட்டியிடுவோம். தேவைப்பட்டால், சின்னம், பெயருக்காகப் போராட தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அஜித் பவாரின் வருகை குறித்து அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ”மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு அஜித் பவாரையும், அவருடன் சேர்ந்த தலைவர்களையும் வரவேற்கிறேன். அவரது பக்கம் நிறைய எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் உள்ளனர். அவருடைய வரவு, மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு உதவும்.

இரட்டை எஞ்சின் கொண்ட இந்த அரசு, இனி புல்லட் ரயிலின் வேகத்தில் இயங்கும். சிலர் கூக்லி, க்ளீன் போல்டு என்று பேசிக் கொண்டிருந்தனர், ஆனால் இன்று யார் கிளீன் போல்டு ஆனார்கள் என்று எல்லோரும் பார்த்தார்கள்” எனப் பதிலளித்துள்ளார்.

அதேநேரத்தில் கட்சியை உடைத்த அஜித் பவார் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “எங்கள் கட்சிக்கு இது ஒன்றும் புதிதல்ல. 1980ஆம் ஆண்டே எங்கள் கட்சியில் இருந்து 58 எம்எல்ஏக்கள் வெளியேறி வெறும் 6 எம்எல்ஏக்கள் மட்டுமே என்னுடன் இருந்தனர். பின்னர் மீண்டும் கட்சியைப் பலப்படுத்தி, எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை உயர்த்தினேன். என்னைவிட்டு விலகியவர்கள் தங்கள் தொகுதிகளில் தோற்றுப் போனார்கள். எனது கட்சி பிரிந்தது என்று நான் ஒருபோதும் கூறமாட்டேன்.

இந்த பிரச்னை எனது கட்சி தொடர்பானது அல்ல, இது மக்களின் பிரச்னை. வெளியேறியவர்களின் எதிர்காலம் குறித்து நான் கவலைப்படுகிறேன். இதற்கான பெருமையை பிரதமர் மோடிக்கு வழங்க விரும்புகிறேன். எனது கட்சியைச் சேர்ந்த சிலர் தற்போது வேறொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். எங்களின் முக்கிய பலம் சாமானிய மக்கள்தான், அவர்கள்தான் எங்களைத் தேர்ந்தெடுத்துள்ளனர். கட்சியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும், முக்கிய பிரச்னைகள் குறித்தும், ஜூலை 6ம் தேதி அனைத்து தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தேன்; ஆனால் அதற்குள் சிலர் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் தேசியவாத காங்கிரஸ் குறித்து மோடி பேசினார். ’தேசியவாத காங்கிரஸ் முடிந்து போன கட்சி’ என்றார். ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். என்னுடன் இருந்தவர்கள் சிலர் இன்று பதவியேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன்மூலம், அனைத்து குற்றச்சாட்டுகளும் போய்விடும். எனவே அவர்களுக்கு நான், நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை முடிவு செய்வது சபாநாயகரின் உரிமை. 3 நாட்களுக்குள் எதிர்க்கட்சி தலைவர் குறித்து காங்கிரஸிடமும், உத்தவ் தாக்கரேவிடம் பேசவுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ராவத்
சஞ்சய் ராவத்ani

இதுகுறித்து உத்தவ் பாலா சாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பியுமான சஞ்சய் ராவத், "மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் விளையாட்டை மக்கள் நீண்டநாள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சச்சின் சாவந்த், "பாஜகவின் அடித்தளம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. மக்கள் அதை ஏற்க விரும்பவில்லை. அதனால்தான் பாஜக தொடர்ந்து கட்சியை உடைக்க முயற்சிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com