ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்
ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன் 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற்றார். அதனையடுத்து ரகுராம் ராஜனுக்குப் பின்னர் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் யார் என்ற கேள்வி பரவலாக எழுந்தது. அப்போது உர்ஜித் படேலை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக மத்திய அரசு நியமித்திருந்தது.
அதன்படி உர்ஜித் படேல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி வரை இப்பொறுப்பில் இருப்பார் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் இன்னும் ஒருமாதம் பதவிக்காலம் இருக்கும் நிலையில் நேற்று தனது ராஜினாமாவை அறிவித்தார் உர்ஜித் படேல். தனது சொந்தக்காரணங்களுக்காக விலகுவதாக அவர் அறிவித்தார்.
இந்நிலையில் அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில்; ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு 63 வயதாகும் சக்திகாந்த தாஸ் ஒடிசாவைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தமிழகத்தில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர். ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சக்திகாந்த தாஸ் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அப்பதவி வகிப்பார்.
இவர் பொருளாதார விவகார செயலாளராக 2015 முதல் 2017 வரை பணியாற்றியவர். தற்போது இந்தியாவின் நிதி ஆணையக்குழுவின் உறுப்பினராக உள்ளார். ஜி20 மாநாடுகளின் இந்தியாவின் சார்பில் பங்கேற்பாளராகவும் இவர் உள்ளார். முதலில் நிதி அமைச்சகத்தின் வருவாய் துறையில் இருந்தார். பின்னர் பொருளாதார விவகாரங்களுக்கு மாற்றம் செய்யபட்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சக்திகாந்த தாஸ் அதிக ஆதரவு கொடுத்தவர். அந்த நடவடிக்கையால் இந்திய பொருளாதாரத்தில் பெரும் நஷ்டம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவித்தவர்.