“அஃப்ரிதியின் காஷ்மீர் குறித்த கருத்து சரிதான்” - ராஜ்நாத் சிங்
பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிதி கூறியுள்ளதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றுள்ளார்.
லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அஃப்ரிதி, “பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. பாகிஸ்தானால் தன்னுடைய நான்கு மாகாணங்களையே நிர்வகிக்க முடியவில்லை. அதேபோல், காஷ்மீரை இந்தியாவிடமும் கொடுக்காதீர்கள். காஷ்மீர் ஒரு தனி நாடாக இருக்கட்டும். அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் சாகக் கூடாது. மனிதநேயம் அங்கு நிலைத்திருக்க வேண்டும். மக்கள் காஷ்மீரில் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பது பார்ப்பதற்கு வருத்தமாக உள்ளது” என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக அஃப்ரிதி பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அஃப்ரிதியின் கருத்து குறித்து பேசிய ராஜ்நாத் சிங், “அஃப்ரிதி சொன்னது சரிதான். அவர்களால் பாகிஸ்தானை கூட நிர்வகிக்க முடியவில்லை. அவர்களால் எப்படி காஷ்மீரை பாதுகாக்க முடியும்?. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, லண்டனில் பேசிய தன்னுடைய பேச்சை இந்திய ஊடகங்கள் தவறுதலாக திரித்து வெளியிட்டுள்ளன என்று அஃப்ரிதி குற்றம் சாட்டி உள்ளார். “தன்னுடைய கருத்து இந்திய ஊடகங்களால் திரித்து கூறப்பட்டு வருகிறது. நான் என்னுடைய நாட்டின் மீது அதிக பற்று வைத்துள்ளேன். ஆனால், காஷ்மீர் மக்களின் போராட்டத்தை வைத்தே அந்தக் கருத்தினை கூறினேன். காஷ்மீரில் மனிதநேயம் காக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களது உரிமைகளை பெறவேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அஃப்ரிதி தெரிவித்துள்ளார்.