“ஷாருக்கான் பலியாக்கப்பட்டுள்ளார்” : மும்பையில் திரைதுறையினருடன் மம்தா பானர்ஜி சந்திப்பு
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பாஜக கொடூரமானது மற்றும் ஜனநாயக விரோதமான கட்சி என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார்.
மும்பையில் தனது பயணத்தின்போது மம்தா பானர்ஜி, திரைப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், நடிகர்கள் ரிச்சா சத்தா, ஸ்வாரா பாஸ்கர், முனாவர் ஃபரூக்கி, சுதீந்திர குல்கர்னி உள்ளிட்ட பலரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவை கொடூரமான மற்றும் ஜனநாயகமற்ற கட்சி என்று குற்றம்சாட்டினார். வலதுசாரி சக்திகளிடம் இருந்து ஜனநாயக சக்திகள் எப்படி நாட்டை காப்பாற்றுவார்கள் என்ற மகேஷ் பட்டின் கேள்விக்கு பதிலளித்த மம்தா, "இந்தியா மனித சக்தியை விரும்புகிறது, தசை பலத்தை அல்ல. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது தோற்றம். துரதிர்ஷ்டவசமாக பாஜகவின் கொடூரமான, ஜனநாயகமற்ற மற்றும் நெறிமுறையற்ற அணுகுமுறையை நாம் எதிர்கொள்கிறோம். பாஜகவால் மகேஷ் பட் பாதிக்கப்பட்டார், ஷாருக்கான் பலியாக்கப்பட்டார் என்பது எனக்குத் தெரியும். இன்னும் பலர் உள்ளனர், சிலர் வாயைத் திறக்கலாம், சிலரால் முடியாது" என்று கூறினார்.
அக்டோபர் மாத தொடக்கத்தில் மும்பையில் ஒரு உல்லாசக் கப்பலில் சோதனை நடத்தியபோது ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், போதைப் பொருள் வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டு ஒருமாதம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த போதைப்பொருள் வழக்கில் உயர் நீதிமன்றம், குற்றம் செய்ய சதி செய்ததாகக் காட்ட, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதன்மையான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியது.
முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் மற்றும் மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே, சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் ஆகியோரை மம்தா பானர்ஜி சந்தித்தார்.