18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை மணந்து உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையே!
18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமியை திருமணம் செய்து பாலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை 18 வயதிற்கு முன்பாகவே பெண்களுக்கு திருமணம் செய்யும் வழக்கம் இன்றளவும் கிராமப்புறங்களில் உள்ளது. இதற்கு எதிராக குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், பெண்கள் வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்யும் வழக்கம் இன்னும் நீடித்து வருகின்றது.
இந்த நிலையில், குழந்தை திருமணத்தை தடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமியை திருமணம் செய்து பாலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையே என்று இன்று தீர்ப்பு அளித்துள்ளது. திருமணம் ஆகி ஒராண்டிற்குள் அந்த பெண் புகார் அளித்தால் அது வன்கொடுமையாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்திய தண்டனை சட்டத்தின் படி, 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வது பாலியல் வன்கொடுமை ஆகும். ஆனால், 15 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள பெண்களை திருமணம் செய்து கொண்டு உறவு கொள்ளும் ஆண்களுக்கு மட்டும் இந்த தண்டனை சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், தற்போது உள்ள தண்டனை சட்டம் ஆண்களை பாதுகாக்கும் வகையில் உள்ளதாகவும், அந்த விலக்கு நீக்கப்படுவதாகவும் இன்றையை தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமியை திருமணம் செய்து பாலுறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமையே என்ற கருத்துக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.