விவசாயிகள் போராட்டம்: அமெரிக்கா தலையிட கோரும் எம்.பி.க்கள்; ரியாக்ட் செய்யுமா இந்தியா?

விவசாயிகள் போராட்டம்: அமெரிக்கா தலையிட கோரும் எம்.பி.க்கள்; ரியாக்ட் செய்யுமா இந்தியா?
விவசாயிகள் போராட்டம்: அமெரிக்கா தலையிட கோரும் எம்.பி.க்கள்; ரியாக்ட் செய்யுமா இந்தியா?

விவசாயிகள் போராட்ட பிரச்னையில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாக கொண்டவருமான அமெரிக்க எம்.பி. பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட ஏழு பேர் வலியுறுத்தி கடிதம் எழுதியிருப்பது பல்வேறு விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு ஆகியவற்றுக்கு ஆபத்து உள்ளதாக கூறி நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் உயிரை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடங்கி ஒரு மாதமாகிறது. விவசாயிகள் - மத்திய அரசு இடையே நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில்தான் முடிந்தன. தற்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு இருதரப்பும் சம்மதம் தெரிவித்திருக்கிறது. ஆனால், `யார் போராடினாலும் வேளாண் சட்டங்கள் நீடிக்கும்' என மத்திய அமைச்சர்கள் சிலர் பேசி வருகின்றனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, இந்திய விவசாயிகளின் பிரச்னை உலக நாடுகள் வரை சென்றது. அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். அவரின் கருத்துக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும், தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்தார் ஜஸ்டின் ட்ரூடோ. இப்படி, விவசாயிகள் போராட்டத்துக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஆதரவு கிடைத்து வருகிறது. இப்போது, விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்க அரசு தலையிட வேண்டும் என அந்நாட்டின் ஏழு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோவுக்கு ஒரு பெரிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்கள்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாக கொண்ட அமெரிக்க எம்பியான பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட ஏழு பேரும் எழுதியுள்ள கடிதத்தில், ``இந்திய விவசாயிகள் போராட்டத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும். வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் இதுதொடர்பாக பேச வேண்டும். ஏனென்றால், இந்திய விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை, அமெரிக்காவில் குடியேறி வாழ்ந்து வரும் பல இந்தியர்களுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தும். அமெரிக்க வாழ் இந்தியர்களின் பலரின் குடும்ப உறுப்பினர்கள் பஞ்சாப் மாநில பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இந்த இந்தியர்களில் பலருக்கும் அந்தப் பகுதிகளில் பூர்வீகச் சொத்துகள் உள்ளன.

இதனால் போராட்டம், குறிப்பாக அமெரிக்காவில் வாழும் சீக்கிய மக்களுக்குத் தொடர்புடையது. எனவே, போராட்டங்களை தீர்க்க, இந்திய அரசுக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கலாம். இதற்கு முன் அமெரிக்காவுக்கு இது மாதிரியான அரசியல் போராட்டங்களைக் கையாண்ட அனுபவம் இருக்கிறது. எனவே, இந்தியாவில் அரசியல் வெளிப்பாடுகளை மக்கள் வெளிப்படுத்தும் சுதந்திரத்தை வலுப்படுத்த வெளியுறவு அமைச்சரை மைக் பாம்பேயோ, ஜெய்சங்கரைச் சந்திக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், இந்திய அரசு தரப்பில் இந்த தகவலுக்கு எந்த பதிலும் வெளிவரவில்லை. கனடா பிரதமர் போன்ற வெளிநாட்டு தலைவர்கள் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தபோது, அதற்கு இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், இந்த முறை எப்படி மத்திய அரசு செயல்படப்போகிறது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையே, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இம்மாத தொடக்கத்தில், 3 அமெரிக்க எம்பிக்கள் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதருக்கு கடிதம் எழுதினர். இரண்டு நாட்களுக்கு முன்புகூட எம்பியான டேவிட் த்ரோன் என்பவர் விவசாயிகள் போராட்டத்துக்கு வெளிப்படையான ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com