HEADLINES |மணிப்பூர் செல்லும் பிரதமர் முதல் பரப்புரையைத் தொடங்கும் விஜய் வரை!
புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் வடகிழக்கு மாநிலங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி முதல் திருச்சியில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கும் விஜய் வரை விவரிக்கிறது.
கலவரத்துக்குப் பின் முதல்முறையாக மணிப்பூருக்கு இன்று செல்கிறார் பிரதமர் மோடி. மிஸோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்து, நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
தேர்தல் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்குகிறார் தவெக தலைவர் விஜய். திருச்சியில் ஆரம்பித்து பெரம்பலூர், அரியலூரில் மக்களைச் சந்திக்கிறார்.
விவசாய நிலம் வாங்கிய விவகாரத்தில் தவறான தகவல் பரப்பப்படுவதாக அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
நடிகையிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யாவிட்டால் கோரிக்கையை ஏற்கப் போவதில்லை என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராமதாஸ் - அன்புமணி தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
டெல்லியில் பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்றுமுதல் ஆறு நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேபாளத்தின் பதற்றத்துக்கு மத்தியில் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பதவியேற்றார்.
50 சதவீத வரி விதிப்பு, இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் 304 ரன்களை குவித்து இங்கிலாந்து சாதனை படைத்ததுடன், 146 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியும் பெற்றது.