குஜராத், இமாச்சலில் முதல்வர்கள் யார்?: தேர்வு செய்ய குழு அமைத்தது பாஜக
குஜராத், இமாச்சல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்ய குழுவை அமைத்துள்ளது.
182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத்தில் 99 தொகுதிகளை கைப்பற்றி 6-ஆவது முறையாக பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. இதேபோல் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றிவிட்டு ஆட்சி கட்டிலில் அமர்கிறது பாஜக. இதையடுத்து, இரு மாநிலங்களிலும் கட்சியின் சட்டப்பேரவை தலைவரை தேர்வு செய்யும் பணிக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்கிறார்கள். குஜராத் மாநிலத்திற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பா.ஜ.க. பொதுச்செயலாளர் சரோஜ் பாண்டே ஆகியோர் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்யும் பணியினை கண்காணிக்கும் பொறுப்பு மூத்த தலைவர் நரேந்திர சிங் தோமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.