திருநங்கைகளுக்காக தனி கழிவறை: நாக்பூர் நிர்வாகம்
திருநங்கைகளுக்காக தனி கழிவறை அமைக்க நாக்பூர் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
போராட்டத்தை மட்டுமே தங்களது வாழ்க்கையாகக் கொண்டவர்கள் திருநங்கைககள். ஆணுக்கும், பெண்ணுக்கும் கிடைப்பது போன்ற அடிப்படை உரிமைகள் எதுவும் இவர்களுக்கு கிடைப்பது இல்லை. அதில் முக்கியமானது கழிவறை வசதி. பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கூட கழிக்க முடியாமல் பல திருநங்கைகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருநங்கைகளுக்காக தனிக் கழிவறை கட்ட நாக்பூர் மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்று நாக்பூர் ஆகும். இங்கு கிட்டத்தட்ட 1200க்கும் அதிகமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருநங்கைகளுக்காக செயல்பட்டு வரும் சார்தி அறக்கட்டளை, நாக்பூர் ஆட்சியர் சச்சின் குர்வேவை சந்தித்து திருநங்கைகளுக்காக தனியான கழிவறை வசதி செய்துத்தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து நாக்பூரில் திருநங்கைகளுக்காக தனிக் கழிவறை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வந்துள்ளது.
இதுகுறித்து சார்தி அறக்கட்டளையின் முதன்மை செயல் அதிகாரி நிகுன் ஜோஷி கூறும்போது, திருநங்கைகளுக்காக தனிக் கழிவறை வசதி வேண்டும் என்றும் மருத்துவமனைகளில் தனிவார்டு வசதி வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தோம். தற்போது திருநங்கைகளுக்காக தனிக் கழிவறை அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.