அசைவம் உண்ணும் மாணவர்களுக்கு தனித்தட்டு: மும்பை ஐஐடி-யில் சர்ச்சை!
அசைவ உணவு உண்ணும் மாணவர்கள் தனித்தட்டுகளை பயன்படுத்துமாறு மும்பை ஐஐடி நிர்வாகம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
விடுதிகளின் மெஸ் கவுன்சிலுக்கு இந்திய தொழில்நுட்பக் கழகம் கடந்த 12ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. ஐஐடி-யின் இந்த அறிக்கையில், அசைவ உணவு உண்ணும் மாணவர்கள் தனித் தட்டுகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அசைவு உணவு வகையில் மற்றும் இரவு உணவின் போது அசைவம் உண்ணும் அனைத்து மாணவர்களுக்கு தனித்தட்டையே பயன்படுத்துமாறும், பொதுவாக உள்ள தட்டுகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கடைபிடிக்குமாறு மும்பை ஐஐடி நிர்வாகம் மாணவர்களிடம் கூறியுள்ளது.
இதற்கு மாணவர்கள் மற்றும் பலரிடம் இருந்த கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதையடுத்து விளக்களித்துள்ள மெஸ் கவுன்சில், இந்த நடைமுறை ஏற்கனவே இருக்கும் ஒன்று தான் என்றும், அதனை கடைபிடிக்குமாறு மட்டுமே மாணவர்களுக்கு கூறியுள்ளதாவும் தெரிவித்துள்ளது. ஆனால் இதுதொடர்பாக கூறும் மாணவர்கள், அனைத்து மெஸ்களும் ஏற்கனவே சைவ, அசைவ உணவுகளை தனித்தனியாகத்தான் வழங்குகிறது என்றும், இவ்வாறு இருக்க ஏன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தெரியவில்லை என்றும் கூறுகின்றனர். அத்துடன் சில வலது சாரி அமைப்புகள் தங்களை சைவ உணவிற்கு மாற்ற நினைப்பதாகவும், இது பாகுபாட்டை ஏற்படுத்தும் செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் நீண்ட வருடங்களாகவே சைவ, அசைவ, ஜெயின் உணவுகள் தனித்தனி வரிசைகளில் வழங்கப்படுவதாகவும், இதுதொடர்பாக யாரும் புகார் தெரிவிப்பதில்லை என்றும் கூறுகின்றனர்.